முன்னுரை
உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்த சுதந்திரம் பயன்படவேண்டும் என்ற கொள்கையினை உடையவர் கவிஞர் தமிழ்ஒளி. புதுவையில் பிறந்ததாலும் பொதுவுடைமைச் சிந்தனையோடு கவிதைகளை எழுதியதாலும் பாரதிதாசன் விரும்பியதொரு எழுத்தாளராகத் திகழ்ந்தார். தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். பொது மக்களின் நலனுக்காக நெஞ்சத்திலிருந்து வார்த்தைகளைக் கொண்டு வருபவனே உண்மையான கவிஞன் என்றும் உண்மை, அன்பு, வாழ்க்கை மற்றும் கலைத்திறனோடு படைப்புகள் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் எழுதினார். எனவே, சமூகப் பிரச்சினைகள் அனைத்தும் இவரது படைப்புகளின் பாடுபொருளாயின. தாய்மொழிக் கல்வியைத் தமிழ்ஒளி ஆதரித்தார். சாதி, மத வேறுபாடுகளைக் களையவும் தமிழ்ப்பண்பாடு மேம்படவும் தளராமல் எழுதி வந்தார். 'அந்தி நிலா பார்க்க வா!' என்ற குழந்தைப் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றன. குறுநாவல், காவியம், சிறுகதைகள், ஓரங்க நாடகம், வரலாற்று நூல் எனப் பன்முகப்படைப்பாளியாகத் திகழ்ந்த தமிழ் ஒளியின் கவிதைகளில் உள்ள சமூகப் பிரச்சனைகள் குறித்து இப்பகுதியில் ஆராயலாம்.
பிரபல கட்டுரைகள்
சிலப்பதிகாரம்: நூலமைப்பு மற்றும் கதையமைப்பின் சிறப்புகள்
20 ஜூன் 2025
உலகத் தமிழ் மாநாடுகள் விவரம் - அட்டவணை
01 ஜூலை 2025
தொல்காப்பியம் குறிப்புகள் மற்றும் அமைப்பு
30 ஜூன் 2025
மணிமேகலை – நூலமைப்பும் கதையமைப்பும் | இலக்கிய சிறப்புகள் விளக்கம்
21 ஜூன் 2025
கவிஞர் தமிழ்ஒளி கால சமுதாயப் பிரச்சினைகள்
1947-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த தமிழ் ஒளி, மே தினத்தைப் பற்றிக் கவிதை எழுதினார். அக்கவிதை, தொழிலாளர்களின் நிலையைப் புரட்சியோடு கூறியது. உழவனின் பொங்கல் கனவு, நெசவாளி விரும்பாத தீபாவளி, துயரச் சுமை தூக்கும் துறைமுகத் தொழிலாளி, கடலைப் பார்த்துக் கண்ணீர் சிந்தும் மீனவர், மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் சலவைத் தொழிலாளி, வீதியில் நின்று கையேந்தும் கழைக்கூத்தாடி, விதியை நொந்து விடிவு காணாத விதவையர் என அவர் எழுதிய கவிதைகள் அனைத்தும் சமுதாயப் பிரச்சினைகளை வெளிப்படுத்தியவையாகும். அரசியலில் சிக்கல்களும் போராட்டங்களும் மிகுந்திருந்த சூழலில் கவிஞர் வாழ்ந்தவர் என்பதால், தம் படைப்பில் அதனைப் பாடுபொருள் ஆக்கினார். ஆட்சி செய்வோரைச் சொற்களால் எதிர்த்தார். சாதிய வெறியினை 'வீராயி' என்ற காவியமாக்கினார். 'நொந்து கிடப்பவர் வாழவில்லை எனில் நொள்ளை விடுதலை யாருக்கடா' என்று கேள்வி எழுப்பியவர். உரிமையற்றுக் கிடந்த உழவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். ஏழை எளிய மக்களின் வாழ்க்கை. போராட்டம் மிகுந்ததாகவே இருந்தது.
"ஊரை எழுப்பிடவே - துயர்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் - தமிழ்ச்
சாதி விழித்திடவே!"
எனத் தமிழ் மக்கள் முடங்கிக் கிடப்பதைக் கண்டு, வீறு கொண்டு எழுச்சியுற வேண்டுமாறு பாடினார். சாக்கடைச் சமுதாயம் என்ற பெயரில் கதைத் தொகுப்பு எழுதினார். இவற்றையெல்லாம் அறியும்போது. அன்றைய காலத்தில் அதிகமான சமுதாயச் சீர்கேடுகள் இருந்ததை உணரமுடிகிறது.
ஒரு எழுத்தாளன் படைக்கின்ற படைப்புகள் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்; எழுத்தாளனுக்குப் பயன்படக்கூடியதாக இருக்கக்கூடாது என்ற கொள்கையுடன் தமிழ் ஒளி வாழ்ந்துள்ளார்.
போராட்டம் மிகுந்த எளியவர்கள் வாழ்க்கை நிலை
மக்களின் பிரச்சினைகளைக் கண்டு மனம் வருந்திய கவிஞர் தமிழ்ஒளி, சமுதாயத்தை மாற்றியமைக்க பொதுவுடைமை இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தார். பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஜீவாவுடன் இணைந்து செயல்பட்டார். ஏழைகளாகவே வாழ்கின்ற உழைக்கும் மக்களின் வாழ்க்கையினைக் கண்டு கொதித்தெழுந்தார். முதலாளிமார்களும், அரசியல்வாதிகளும் எளிய மக்களை ஏமாற்றி, அடிமையாக வைத்திருப்பதில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்தார். சாதி, மதம், மூடப்பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் மக்கள் முடங்கிக் கிடப்பதை எதிர்த்தார். தொழிலாளர்களின் போராட்டத்திற்குக் கவிதை வரிகளால் ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தினார். பாரதி, ரஷ்யாப் புரட்சி செய்ததை ஆதரித்தது போல, இவர் சீனப்புரட்சியை ஆதரித்துப் பாடினார்.
நீதித்துறையின் செயல்பாட்டினை, 'கெட்ட கனவு' என்ற சிறுகதையில் விமர்சித்தவர். நீதிபதியைப் பார்த்து, "ஒரு நாளாவது மனிதனைப் பற்றியும் அவன் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பது பற்றியும் அவன் சூழ்நிலையைப் பற்றியும் நீர் யோசித்தது உண்டா?" என்று கேள்வி கேட்டவர். இக்கேள்வி, இன்றைக்கும் பொருந்தும்.
“கத்தி முனைதனிலே - பயங்
காட்டும் உலகினிலே
சத்திய பேரிகையை - நான்
தட்டி முழக்கிடுவேன்"
எனக் கவி இயற்றி சமூகத்தை எழுச்சியுறச் செய்தார். எளிய குடும்பத்தில் பிறந்த தாழ்ந்த ஜாதிப் பெண்கள், தங்கள் கற்பை பாதுகாக்கப் போராட வேண்டியிருந்தது. நொந்து கிடப்பவர்க்கு வாழ்க்கையில்லாமல், நொள்ளை விடுதலை யாருக்கடா? என்று கூறினார். இயற்கைச் சூழலைப் பாடுவதில்கூட மக்களின் பிரச்சினைகளை நினைவூட்டியவர் கவிஞர் தமிழ்ஒளி, இடியும் மின்னலும் தோன்றியதுகூட மக்கள் தொடுத்திட்ட யுத்தமாகத் தெரிகிறது. இவரது படைப்புகள் அனைத்தும் காலத்தை வென்று நிற்கக் கூடியவை.
பிரபல கட்டுரைகள்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை
16 ஜூன் 2025
கடிதம் - புதுமைப்பித்தன்
16 ஏப்ரல் 2025
கத்தியின்றி - நாமக்கல் கவிஞர்
14 ஏப்ரல் 2025
சீவகசிந்தாமணி - நூலமைப்பும் கதையமைப்பும் | இலக்கிய சிறப்புகள் விளக்கம்
22 ஜூன் 2025
TNPSC 2025 Daily Current Affairs
03 மே 2025
கந்தல் உடையின் எண்ணற்ற கண்களான விண்மீன்கள்
ஆகாயத்து விண்மீன்களைப் பார்த்த கவிஞர் தமிழ்ஒளிக்கு, அவற்றின் அழகை ரசிக்கத் தோன்றியதைவிட, மண்ணில் வாழ்கின்ற மக்களின் சிக்கல்களே நினைவிற்கு வருகிறது. வானத்தில் மின்னுகின்ற விண்மீன்கள், ஏழைகள் வாழும் குடிசை வீட்டின் ஓட்டைகளாகத் தோன்றுகின்றன. உழைத்து வாழ்பவர்களின் உடம்பில் உள்ள தழும்புகளாகத் தெரிகின்றன. உழைப்பவர் உடலில் அத்தனை காயங்கள் ஏற்பட்டதன் அடையாளமாகத் தழும்புகள் உள்ளன.
தமிழ்நாட்டு மக்களின் கண்களெல்லாம் துடித்துக் கிடப்பதாகத் தோன்றுகின்றன. மக்கள் தினமும் சிக்கல்களுடனே வாழ்கின்றனர். பெண்களுக்கென எந்தச் சுதந்திரமும் உரிமைகளும் இல்லை. எனவே, அவர்கள் சோக உணர்ச்சிகளோடு உள்ளனர். அத்தகைய உணர்ச்சியின் சிதறல்களாக விண்மீன்கள் காட்சியளிக்கின்றன.
"இரவெனும் வறுமையின் கந்தல்உடை - தனில்
எண்ணற்ற கண்களோ விண்மீன்கள்?
அருந்தக்கூ ழின்றியே வாடுபவர் - கண்ணீர்
அருவித் துளிகளோ வான்குன்றிலே "
என மக்களின் வறுமை நிலையை விண்மீன்களாக உருவகப்படுத்துகின்றார். பிச்சையெடுப்பவர்களின் மனதில் எழுகின்ற விம்மல்களான விண்மீன், திடீரென கவிஞருக்கு அற்புதமாகத் தெரிகிறது. நீலக் கண்ணாடியால் ஆன கோட்டையில் மின்னல் நெளிவில் இறைக்கப்பட்ட காட்சியாக விண்மீன்கள் விளங்குகின்றன. உண்மையாக வாழ்கின்ற தொழிலாளர்களின் எண்ணத்தில் உள்ள துன்பங்கள் பொங்கி வெளிப்பட்டு விண்மீன்களானதோ? எனக் கவிதையை முடிக்கிறார்.
கவிதைக்குத் தலைப்பு வைத்திருப்பதில்கூட வேறுபட்ட சிந்தனையுடன் 'மீன்கள்' எனக் குறிப்பிடுகிறார். 'விண்மீன்கள்' எனத் தலைப்பிடாமைக்குக் காரணம், 'நீந்திக்கொண்டேயிருக்கின்ற உழைப்பின் அடையாளமான மீன்களை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணமாக இருக்கலாம்'.
முடிவுரை
எளிய மக்களின் வாழ்க்கையினை உயர்த்துவதற்காக அதிகமாக எழுதுகோலைப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர் தமிழ்ஒளி. பொதுமைச் சிந்தனை மிகுந்தவர் கவிஞர் என்பதை இக்கட்டுரை தெளிவாக விளக்குகிறது. பாட்டாளி மக்களுக்குப் பாதுகாவலனாக விளங்கியுள்ளார். புலமை மிக்க எழுத்தாளர்: யதார்த்தவியலோடு எழுதியவர் என்பதை அவருடைய படைப்புகள் உறுதிபடுத்துகின்றன. தொழிலாளரின் சிக்கல்களுக்குத் தீர்வு காணத் துணிந்த அவரது கம்பீரத்தைப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக