நூல் அறிமுகம்
தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது.
தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கலைஞர். எழுத்தைப் பற்றிக் கூறவந்த கலைஞர், தொல்காப்பியர் கருத்தினை உள்வாங்கி. "ஒதுங்கிச் சிலைவடிக்க உளியும் ஓவியம் தீட்டத் தூரிகையும் போல எழுத்துத் தேவையன்றோ நூல் படைக்க" (பக்கம் 41) எனக் கூறி எழுத்துக்களின் அணிவகுப்பைச் சிறப்பாகக் கூறியுள்ளார். 143 நூற்பாக்களைத் தேர்ந்தெடுத்து விளக்கம் எழுதியுள்ளார்.
தொல்காப்பியப் பூங்காவை எழுதியதோடு மட்டுமன்றி, அடையாறில் இயற்கையழகு பொருந்திய 'தொல்காப்பியப் பூங்காவினை கலைஞர் 2011இல் உருவாக்கினார். எழுத்து பற்றிய செய்தி 3ஆவது மலராக மலர்ந்துள்ளது. இந்நூலினை தமிழ்க்கனி பதிப்பகம் 2003ஆம் ஆண்டு வெளியிட்டது.
ஆசிரியர் அறிமுகம் - கலைஞர் மு.கருணாநிதி
மு.கருணாநிதி 1924ம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாளன்று இன்றைய நாகப்பட்டினம் திருக்குவளையில் முத்துவேல்-அஞ்சுகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். திருவாரூர் மாவட்டம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். இவருக்குத் தமிழாசிரியராக வாய்த்தவர் சி. இலக்குவனார் ஆவார். பள்ளிப் பருவத்திலேயே கவிதை, நாடகம், இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். வளர் இளம் பருவத்திலேயே 'தமிழ் மாணவர் மன்றம்' என்னும் இளைஞன் மறுமலர்ச்சி அமைப்பை 1944-ல் உருவாக்கினார். 'மாலைநேசன்' என்னும் கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். 'முரசொலி' என்னும் துண்டு வெளியீட்டை 1942-ல் வெளியிட்டார். பல தடைகளுக்குப் பிறகு 1960-ல் நாளிதழாக மாற்றினார். கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகியன அவரை அரசியலுக்குள் இழுத்துச் சென்றன. 1957-ல் குளித்தலை சட்டமன்ற தொகுதிமூலம் சுயேச்சை வேட்பாளராகச் சட்டப்பேரவை உறுப்பினரானார். 1960-ல் திமுக-வின் பொருளாளராகவும், 1969-ல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
கலைஞரின் படைப்புலகம்
தமிழ் இலக்கிய உலகை மட்டுமன்றி தமிழ்த்திரையுலகையும் தம் படைப்புத்திறத்தால் ஆண்டவர். தனது 15வது வயதில் 'பழனியப்பன்' என்ற முதல் நாடகத்தை எழுதினார். தொடர்ந்து கவிதைகள், நாவல்கள், நாடகங்கள், கடிதங்கள், திரைக்கதை, உரையாடல்கள் போன்ற பல்வகைப் படைப்புகளை தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். திருக்குறளுக்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா என்று பழம்பெரும் இலக்கிய, இலக்கணங்களை எளிமைப்படுத்திச் சுவையாகப் படிக்கத் தந்தார். முத்தமிழ் அறிஞர் என்று பாராட்டப்பட்டார். தமிழ்ப்பல்கலைக்கழகம் 'தென்பாண்டி சிங்கம்' நாவலுக்காக 'ராஜராஜன் விருதை வழங்கிச் சிறப்பித்தது. 'தூக்கு மேடை' நாடகத்தின்போது எம்.ஆர்.ராதா அவர்கள் இவருக்குக் 'கலைஞர்' என்னும் பட்டத்தை அளித்தார். அது அவரோடு இணைந்து கொண்டது.
கலைஞர் கூறிய எழுத்து பற்றிய செய்திகள்
தொல்காப்பியர் கூறிய உயிர்மெய்யை விளக்க முற்படும்போது, "தமிழர்தம் நெஞ்சில் நிலையாக உள்ள அண்ணாவையும் தன்னையும் கூறும் பாங்கைப் பாருங்கள்" என்னதான் இருந்தாலும் தமிழ் தந்த கொடையைப் பாருங்கள். 'அ' வை முதல் எழுத்தாகக் கொண்ட அண்ணா நமக்குத் தலைவர். மெய்யெழுத்தின் முதலில் வரும் 'க்' கருணாநிதியைக் குறிப்பிடுகிறது என்கிறார். உயிரெழுத்தை அண்ணாவைக் கொண்டும் மெய்யினை கருணாநிதியைக் கொண்டும் நினைவூட்டுகிறார். இரண்டும் சேர்ந்து உயிர்மெய்.
சேரன் செங்குட்டுவன் கனக விசயருடன் போரிட்டு வென்ற இடம் தயிலாலுவம். மெய்யெழுத்துகளின் எண்ணிக்கையை நினைவில் வைத்துக் கொள்ள கலைஞர் கூறிய செய்திகளாவன; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் 18 ஆண்டுகள் போர் நடந்தன. இராமாயணப் போர் 18 மாதங்கள் நடைபெற்றது. பாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. இமயம் வந்த செங்குட்டுவன் நடத்திய போர் 18 நாழிகையில் முடிந்தது.
இச்செய்தியை வகுப்பு ஆசிரியரிடம் பூங்கொடி என்ற பெண் கூறுவதாக அமைத்துள்ளார் கலைஞர். இலக்கணத்தில் முக்கியமானவற்றை நினைவில் வைத்துக் கொள்வதற்காகக் குறிப்பிட்ட நூற்பாக்களைத் தேர்ந்தெடுத்ததாகக் கலைஞர் கூறியுள்ளார். பாமர மக்களும் புரிந்து கொள்வதற்கு ஏற்ப விளக்கம் அமைந்துள்ளது. உதாரணப்படுத்த வரலாற்றுச் செய்திகளைப் பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளார். மலைபோல் இருந்த தொல்காப்பியத்தைத் தன் எழுத்து உளியால் உடைத்து, சிற்பமாக்கிக் கருத்தாழமிக்கக் குறிப்புகளைப் பயிரிட்டுப் பூங்காவாக மாற்றியுள்ளார்.
சமூக முன்னேற்றம், பகுத்தறிவு மற்றும் பெண்ணுரிமை பற்றி கலைஞர் மு. கருணாநிதி எழுதிய திரைப்பணிகளைப் பற்றியும், 'ராஜாராணி' திரைப்படத்தையும் பற்றியும் விரிவாக தெரிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும் - ராஜாராணி திரைப்படப் பதிவு.
கருத்துகள்
கருத்துரையிடுக