English Summary:
ஆசிரியர் அறிமுகம்:
ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியங்கள் வரை உதிரிப்பாடல்கள்தான் என்றாலும் தனித்துவம் மிக்கனவாகப் பிற்காலப் பாடல்கள் உள்ளன. பாடல்களில் அமைந்துள்ள கருத்தமைவும் மொழிநடையும் முற்காலப் பாடல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளன. தனிப்பாடல்களுக்கேற்பத் தமிழ் மொழி அதிகமாக வளைந்து கொடுக்க வேண்டியிருந்தது. அதனால் தனிப்பாடல்களைத் தனிக்காலமாகப் பிரித்து, தெளிவான கால அமைப்பைக் காட்டுகிறது எனலாம். கம்பர், புகழேந்தி போன்ற புலவர்கள் வாழ்ந்த காலத்தில் அறிவுத் திறத்துடன் விளங்கிய பெண்கவிஞர் ஒளவையார், சிவபக்தராகத் திகழ்ந்தார். வரலாற்று வரிசையில் இவர் இரண்டாவது ஔவையார் ஆவார். ஔவையாரின் நுண்ணறிவுத் திறனைத் தனிப்பாடல்கள் உணர்த்துகின்றன.
நூல் அறிமுகம்:
ஒரு பாடலில் ஒரு பொருளை வைத்துப் பாடுவதைத் தனிப்பாடல்கள் என்பர். 1291 தனிப்பாடல்களின் பாடுபொருள்களாக வறுமை, கொடை, காதல், போர், அறம், விருந்தோம்பல் போன்றவை வருகின்றன. புலவர்களின் கற்பனைத்திறம் இலக்கணக் கொள்கைகளோடு வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் பாடல்கள் மிளிர்கின்றன. வெண்பா, கலித்துளை, கட்டளைக் கலித்துறை போன்ற யாப்புகளில் தனிப்பாடல்கள் பெரும்பாலும் பாடப்பட்டுள்ளன. ஒளவையார் எழுதிய பாடல்களில் ஒன்றான 'வான்குருவியின் கூடு' என்ற பாடல், வெண்பா அமைப்பிலானது. வாழ்க்கையில் நேரடியாக சந்தித்த சிக்கலைப் பற்றியதாக இப்பாடல் உள்ளது. மிகச் சாதாரணமான தனிப்பாடலும் நமக்கு வாழ்க்கையில் என்றாவது வழிகாட்டி நிற்கும் என்பதற்கு ஔவையாரின் பாடல் சான்றாகத் திகழ்கிறது. ஐந்தாவது பாடலான இது, சோழ மன்னனுக்குப் பதில் சொல்வதாக அமைகிறது. கம்பரை மிகவும் விரும்பியவன் சோழ மன்னன். எனவே கம்பருக்கு ஆதரவாகப் பேசினான். ஒளவையின் அறிவாற்றலைக் கம்பரோடு ஒப்பிடுகிறான். அதற்கு ஏற்ற பதிலை இப்பாடலில் பதிவு செய்கிறார் ஒளவை. இப்பாடல், ‘ஔவையாரின் தனிப்பாடல்கள்' என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
எளிமையான பண்புடைய ஔவையார். ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவர். மக்களோடு கலந்து உறவாடியவர். ஆனால் அவர் காலத்தில் வாழ்ந்த கம்பரோ அரசனோடு நெருங்கி வாழ்ந்தவர். கம்பரின் பாடல்களைப் புகழ்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து ஔவையாரின் மனம் ஏற்கவில்லை. அரசனும் அதனைப் புரிந்து கொண்டு ஒளவையின் கருத்தினைக் கேட்டான். அதற்கு ஔவை, சொல்நயம், பொருள்நயம் மிகுந்த பாட்டைப் புகழலாம். கம்பர் பாட்டு என்பதற்காகப் புகழக் கூடாது என சிரித்தார். இதனால் சோழ மன்னன் மிகவும் வருந்தினான். மேலும், கம்பர் இயற்றிய பெருங்காவியத்தைப்போல இதுவரை ஒருவரும் இயற்றவில்லை என்றான். ஒளவையார் காவியம் பாடாத நிலையை இங்குச் சுட்டிக்காட்டுவது போலத் தோன்றியது. அதற்குப் பதிலாக இப்பாடலைப் பாடுகிறார் ஒளவை.
பாடல்
'வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்கான்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது"
பாடல் பொருள் விளக்கம்:
வானுயர மரத்தில் கூடுகட்டி இருப்பதால் தூக்கணாங்குருவியை வான்குருவி என்றும் கூறுவர். வானளவு உயரத்தில் சிறகடித்துப் பறந்தபடி மின்மினிப்பூச்சியைக் கூட்டின் ஒரு ஓரத்தில் வைத்துக் கொண்டு இரண்டடுக்காக வீட்டைக் கட்டுமாம். எளிமையாக, விரைவாகக் கூட்டைக் கட்டும் இயற்கையின் அற்புதம். மனிதன் அரக்கினைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர், முருங்கைமரம், அரசமரம் போன்றவற்றிலிருந்து பிசின் எடுப்பர். அதனையே கடிதங்களை ஒட்டப் பயன்படுத்துவர். மரத்தின் சாற்றினை எடுத்து உணவாக்கிக் கொள்ளும் அரக்குப்பூச்சி, மரக்கிளையில் ஒருவகையான திரவத்தினை வெளியிடும். அது காற்றோடு சேர்ந்து அரக்குப் போல மாறும், சின்னஞ்சிறிய வாயினை உடைய கரையான், மண்ணை மென்மையாக மாற்றிப் பெரிய அளவில் புற்றினை உருவாக்குகிறது. சிறிய அறைகளை அடுக்கடுக்காக மெழுகினைக் கொண்டு, ஒன்றுபோல நேர்த்தியாகக் கூட்டினைக் கட்டுகின்ற தேனீக்கள். எல்லா தட்பவெப்பநிலையையும் தாங்கி தேனைப் பாதுகாக்கும். சிக்கலான வலையை மென்மையாக இருக்கும் சிலந்தி, தனது எச்சில் மூலமாகப் பின்னுகிறது. அந்தச் சிலந்தி வலையின் அருகில் வேறு எந்தப் பூச்சியினங்கள் சென்றாலும் சிக்கிக் கொள்ளும். அதுமட்டுமல்ல. வலையினை உற்று நோக்கினால் வலை அமைப்பினை மாற்றிக் கொண்டேயிருக்கும். இயற்கையின் படைப்பில் இவற்றின் அற்புதம் வியப்பை ஏற்படுத்துகிறது
குருவி, புழு பூச்சிகளால் மிக எளிதாகச் செய்ய முடிந்த செயலை, ஆறறிவு கொண்ட மனிதர்களால் செய்ய முடியுமா? என்றால் இயலவே இயலாது. அறிவியல் வளர்ச்சியில் பல சாதனைகளைச் செய்தாலும் சிறிய பூச்சிகளின், பறவைகளின் செயல்களைச் செய்ய முடியாத மனிதன், நாங்கள்தான் வலியவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்? எதையும் என்னால் மட்டும்தான் செய்ய முடியும் என வீர வசனம் பேச வேண்டாம். எல்லாருக்குள்ளும் எதாவது ஒரு திறமை இருக்கிறது. எனவே பிறரைத் தாழ்வாகக் கருதக் கூடாது என ஒளவையார் எச்சரிக்கிறார்.
அனைவரையும் சமமாக எண்ணி வழிநடத்த வேண்டும் என்ற அறிவுரையினை ஒரே பாடலில் அறிவுறுத்தியதும் ஏற்றுக் கொண்ட சோழ மன்னன் தலைகுனிந்து தன் தவறினை உணர்ந்தானாம்.
பாடலின் சிறப்பு:
குருவி, பூச்சியினங்கள் அறிவில் குறைந்தனவாக இருந்தாலும் ஒவ்வொன்றும் தனக்குரிய தனித்திறனை வெளிப்படுத்தி ஆச்சரியமூட்டுகின்றன. அவைகளின் செயலினை வேறு எவராலும் செய்ய இயலாது. அதற்காக, உலகிலேயே தொழில்நுட்பத்தில் சிறந்தவை அவைதான் என எண்ணிவிடுவதில்லை. அதனதன் கூட்டினைக் கட்டுவது அதற்கு எளிது என்பதுபோல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறமை நிறைந்திருக்கும். விருத்தப்பா பாடுவதில் சிறந்தவர் கம்பர் என்றால் வெண்பா பாடுவதில் சிறந்தவராகப் புகழேந்தி உள்ளார். அந்தந்த துறையில் சிறந்தவரை அறிந்து பாராட்ட வேண்டும். ஒருவரை மட்டும் புகழ்ந்து மற்றவரைத் தாழ்த்தக் கூடாது. அடக்கத்தோடு கர்வம் கொள்ளாமல் வாழ்வதுதான் உயர்ந்தவர்களின் பண்பாகும். அனைவரின் தனித்திறமைகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற நற்கருத்துகளை ஔவையார் 'வான்குருவியின் கூடு' பாடலில் குறிப்பிடுகிறார். ஒளவையாரின் இக்கருத்தினைச் சோழனின் அவையில் இருந்த அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இன்றைய உலகில் வாழ்கின்ற தற்பெருமையாளர்களுக்கும் நற்பாடத்தை இப்பாடல் கற்றுக் கொடுக்கிறது.தான் என்ற அகந்தையோடு பிறரைத் தாழ்த்தக் கூடாது என்னும் அறிவுரையை இப்பாடல் வழங்குகிறது.
Keywords:
This post discusses the famous Tamil poem "Vaan Kuruviyin Koodu" by Avvaiyar, a well-known Tamil poetess. It falls under classical Tamil literature and is an example of Tamil philosophical poetry. Avvaiyar’s poems are often taught in Tamil education and are part of Tamil moral literature. This particular poem reflects minimalism, detachment, and spiritual wisdom, making it valuable for those interested in ancient Tamil poems, Tamil poets, and timeless Tamil literary works.
கருத்துகள்
கருத்துரையிடுக