![]() |
| Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar |
ஆசிரியர் அறிமுகம்
எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர்.
கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன.
கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம்.
![]() |
| பாரதியார் |
பாடல் குறிப்பு
சமுதாயம் என்பதற்கு மக்கள் தொகுதி என்பது பொருள். தனிமனிதன், குடும்பம், உறவுகள், ஊர், நகரம், நாடு என்ற அமைப்பே சமுதாயம் ஆகும்.
நம் பாரத சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதிப்பிரிவுகள் சமயச் சண்டைகள், பெண் அடிமை, பெண் விடுதலை, கல்வி, கலைகள், ஒற்றுமைப் பண்பு, மனித நேயம் என அனைத்தும் காணப்படுகின்றன. இவை அனைத்திலும் பொதுவுடைமை காண்பதையே பாரதியார் தன் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். பொதுவுடைமைச் சமுதாயமே அவர் காண விரும்பிய சமுதாயம்.
இறைவன் படைப்பில் அனைத்து இயற்கை வளங்களும் விளைச்சலும் அனைவருக்கும் பொதுவானவை! ஆனால் சிலரே 'இது எங்கள் உடைமை' என்று கூறி, உழைக்கும் மக்களைப் பசியிலும் பஞ்சத்திலும் தவிக்கவிட்டுத் தாம் மட்டும் உண்டு மகிழ்கின்றனர். இந்நிலை கண்டு பாரதியார் கொதித்தெழுகிறார். அக்கொதிப்பில் எழுந்த கவிதைதான் 'பாரத சமுதாயம்' என்னும் கவிதை.
பாடல்
பாரத சமுதாயம் வாழ்கவே- ஜய ஜய ஜய ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை;
ஒப்பி லாத சமுதாயம் உலகத்துக் கொருபுதுமை - வாழ்க!
வழக்க மினியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை யினியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு-
கனியுங் கிழங்குந் தான்யங்களும் கணக்கின்றித்தரு நாடு
வழக்க மினியுண்டோ?
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளுங் காப்போம்
தனி யொருவனுக் குணவில்லை எனில் ஜகத்தினை அழித் திடுவோம்
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமரநிலை யெய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்
எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்!
பாடல் பொருள் விளக்கம்
பாரத சமுதாயம் வாழ்க! அது வளமுடனும் வெற்றியுடனும் வாழ்க! முப்பது கோடி மக்களின் சங்கமமே இந்த பாரத நாடு. முப்பது கோடி மக்களும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலை இல்லாத பொதுவுடைமைச் சிந்தனையுடன் வாழும் நாடு நம் பாரத நாடு. இது ஈடு இணையற்ற, ஒப்பில்லாத சமுதாயம்! நிகரில்லாத நம் பாரத நாடு இந்த உலகத்துக்கே ஒரு புதுமை! அத்தகைய சிறப்பு பெற்ற நம் பாரத நாடு வாழ்க!
நம் தேசத்தில் ஒருவன் உணவையோ, உழைப்பையோ, பொருளையோ மற்றவன் அபகரிக்கும் வழக்கம் இனி எந்நாளும் இல்லை!
ஒருவன் மனமும் உடலும் வருந்த, மற்றவன் அதைப் பார்த்து மகிழந்திருக்கும் அவல நிலையும் இனி நம் நாட்டில் எந்நாளும் இல்லை! அறிவற்ற, மனித நேயமற்ற அந்த வாழ்க்கை நம் பாரத தேசத்தில் இனி உண்டோ? நிச்சயம் இல்லை!
நம் பாரத நாடு வளமான நாடு. இனிய சோலைகள் சூழ்ந்த நாடு நம் நாடு. எண்ணற்ற நெடிய வயல்கள் நிறைந்த நாடு நம் பாரத நாடு. பழ வகைகளும் கிழங்குகளும் நவதானியங்களும் என உணவு வளத்தைக் கணக்கின்றித் தரும் நாடும் நம் பாரத நாடே ஆகும். அதிலும் ஒருநாளும் குறைவின்றி நித்தமும் ஏராளமான வளங்களைத் தரும் நாடு நம் நாடேயாகும். அத்தகைய சிறப்பு மிக்க நம் பாரத நாடு வாழ்க!
இனி புதியதாய் ஒரு விதி செய்வோம்! அந்த விதியை நாம் அனைவரும் எந்த நாளும் காப்போம். தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை என்றாலும் இந்த உலகத்தை அழிப்போம்! எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பதே நமது புதிய கொள்கையாக. புதிய விதியாக இருக்க வேண்டும். அத்தகைய புதிய விதியைப் பின்பற்றும் நமது பாரத நாடு வாழ்வதாக!
'எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்' என்றான் கண்ணன். உலகில் வாழும் எல்லா உயிர்களும் இறைவன் பண்பை உடையனவேயாகும். அத்தகைய அமரத்துவமான தெய்வீக நிலையை உலகம் உணரும்படியான முறையை நம் இந்திய தேசம் உலகிற்கு அளிக்கும். இது உண்மை ! நம் பாரதமே இந்த உலகிற்குத் தெய்வீகப் பண்பைக் கற்றுக் கொடுக்கும். பாரத தேசம் வாழ்க!
நாம் எல்லோரும் ஒரே குலம்; ஒரே இனம்; எல்லோரும் இந்தியரே! அனைவரும் இங்கு சமம்; நாம் ஒருவருக்கொருவர் சரி சமானம்; எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே! ஆம்! நாம் எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே! வாழ்க நம் பாரதம்! பாரத சமுதாயம் வாழ்கவே !


கருத்துகள்
கருத்துரையிடுக