தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரின் காலம் கி.மு. 5000ஆண்டுக்கு முற்பட்டது என்கிறது இறையனார் களவியலுரை. காப்பியன் என்பது இவரின் குடிவழிப் பெயராகும். தொல் என்பது அடைமொழியாகும். "திரண தூமாக்கினியர்” என்பது இவர்பெயர் என நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவர் இடைச்சங்க காலத்தில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இவர் பாண்டியன் தலைநகரான கபாடபுரத்தில் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் தன்நூலை அறங்கேற்றினார். “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனப் பாயிரத்தில் பனம்பாரனார் இவரைப் பாராட்டியுள்ளார். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் இயற்றிய பனம்பாரனாரும் தொல்காப்பியரும் அகத்தியரின் ஒரு சாலை மாணாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியரின் சமயம் இதுவரை அறியப்படவில்லை. தொல்காப்பியம் மூலம் முழுவதும் கி.பி.1847ஆம் ஆண்டு சாமுவேல் பிள்ளையால் முதன்முதலில் அச்சிடப்பெற்றது. இதுவரை 150 பதிப்புகளைக் கண்டுள்ளது தொல்காப்பியம். தொல்காப்பியச் சுவடுகள் இதுவரை 133 கிடைத்துள்ளது என்கிறார்கள்.
தொல்காப்பியர் - குறிப்புகள்
தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் பன்னிரு மாணாக்கர்களில் ஒருவர் என்கிறார்கள். சேர நாடான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு எனும் ஊரில் தொல்காப்பியர் பிறந்ததாகக் கூறுகிறார்கள். அவ்வூரில் நிறுவப்பெற்றுள்ள தொல்காப்பியர் சிலைக்குக் கன்னியாகுமரி மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்படுகிறது. திரவிதாங்கோடு தொல்காப்பியர் ஊர் என்று வையாபுரி பிள்ளை கூறியுள்ளார்.
![]() |
| தொல்காப்பியர் |
தொல் காப்பு இயம் எனும் மூன்று சொற்களால் ஆனது தொல்காப்பியம். இதற்குப் பழமையான மொழிப் பாதுகாப்பு நூல் எனப்பொருள் கூறி, நூலை அடிப்படையாக வைத்து தொல்காப்பியருக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தாகூர் சட்ட விரிவுரையாளர் க.சுப்பிரமணியப் பிள்ளை கூறியுள்ளார். காப்பியக் குடியில் பிறந்ததால் காப்பியர் எனும் சிறப்புக் கருதி தொல்காப்பியர் எனும் பெயர் வந்திருக்கலாம் என்று வித்துவான் வெள்ளை வாரணார் கூறியுள்ளார். காப்பியம் எனும் இலக்கண நூலைச்செய்ததால் காப்பியர் எனும் பெயர் வந்தது என்று பேராசிரியர் ந.இலக்குவனார் இயம்பியுள்ளார்.
எழுத்து, சொல், பொருள், யாப்பு, உவமை எனும் ஐந்து தமிழ் இலக்கணங்களுக்கும் காப்பியர் ஐந்திரம் எனும் இலக்கண நூல் இயற்றியமையால் காப்பியன் எனும் சிறப்புப் பெயர் பெற்றார் என்று கோ.கோவிந்தசாமி நாயுடு கூறுகிறார். அதற்கு ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது சான்று என்கிறார்.
தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியரின் காலம் பற்றி இதுவரை உறுதியாக யாராலும் கூறமுடியவில்லை. ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களிடையே மாறுபட்டக் கருத்துகள் நிலவுகின்றன.
- வித்துவான் ந.வெள்ளைவாரணார் - கி.மு 5320
- புலவர் குழந்தையார் - கி.மு 2000
- க.சுப்பிரமணியப்பிள்ளை - கி.மு 1200
- பேராசிரியர் ந.இலக்குவனார் - கி.மு 700
- மா.இராஜமாணிக்கனார் - கி.மு 400
- எஸ்.வையாபுரிப்பிள்ளை - கி.மு 400
- தெ.பொ.மீனாட்சிசுந்தரம் - கி.மு 200
- இரா. இராகவையங்கார் - கி.மு 200
ஆகியோர் சொல்வதையும் மு.வரதராசனார் சொல்வதையும் ஆராய்ந்து பார்த்தால் மு.வரதராசனாரின் கருத்து பொருத்தமாகத் தெரிகிறது. கிறித்துவுக்கு முன் தொல்காப்பியம் தோன்றியது என்பதில் ஐயமில்லை.
தொல்காப்பியம் அமைப்பு
இதுவரை தமிழ்மொழிக்குக் கிடைத்திருக்கும் இலக்கண நூல்களுள் முழுமையாகவும் காலத்தால் முந்தியதும் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலாகத் தொல்காப்பியம் உள்ளது. இந்நூலை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளனர். இளம்பூரணர் உரைப்படி தொல்காப்பியத்தில் மொத்தம் 1595 நூற்பாக்கள் உள்ளன. நூற்பா எண்ணிக்கையில் உரையாசிரியர்களிடையே வேறுபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் ஒழுங்கை விளக்கி நிற்பவையாகும். பொருளதிகாரம் தமிழ்மொழிப் பேசும் தமிழர்களின் உயர்ந்த எண்ணத்தையும், ஒழுக்கத்தையும் சிறப்பித்துக் காட்டுகிறது. உலகிலுள்ள மொழிகளுக்கு எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும்தான் உண்டு. ஆனால் உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்புகளில் ஒன்று தமிழ்மொழிக்கு இலக்கண ரீதியாகப் பொருளதிகாரம் இருப்பதாகும்.
எழுத்ததிகாரம்
எழுத்துகளின் இலக்கணத்தை முறைப்படி எடுத்துரைக்கும் பகுதி எழுத்ததிகாரமாகும். தொல்காப்பியர் எழுத்திலக்கணத்தை நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்து 483 நூற்பாக்களில் எழுத்துகளின் செயல்களை விளக்கியுள்ளார். தமிழ் எழுத்துகள் முதல், சார்பு என இருவகையுடன் முப்பது என்கிறது தொல்காப்பியம்.
அகரமுதல்
னகர இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே
என்கிறது தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபு முதல் நூற்பா. குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துகள் என்கிறார். மொழிக்கு இன்றியமையாத ஒருமை, பன்மை, வல்லினம், மெல்லினம், இடையினம், எழுத்துகளின் வடிவம், வகை, நிற்கும் இடங்கள், பிறப்பு போன்றவற்றைச் சிறப்பாக விளக்குகிறார். சொற்கள் இணையும் போதும், திரியும் போதும் பொருள் மாறுபடும் என்பதையெல்லாம் ஏனையப் பகுதிகளில் குறிப்பிடுகிறார்.
சொல்லதிகாரம்
சொல்லதிகாரம் என்பது தமிழ்ச் சொற்களின் சிறப்பு, திணை, பால், உயிர்பகுப்பு, நாகரிகச் சொற்கள், சொல்லுக்குரிய விதிகள் போன்றவற்றைக் குறிப்பிடுவதாகும். கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்து 456 நூற்பாக்களில் சொல்லதிகாரச் செய்திகளைத் தொல்காப்பியர் விவரிக்கிறார். தமிழ்ச்சொற்கள் அனைத்தும் உயர்திணை, அஃறிணை ஆகிய இரு பிரிவுகளுக்குள் அடங்கும் என்கிறார்.
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே”
என்கிறது தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் முதல் நூற்பா. உயர்திணைச் சொற்களை ஆண்பால், பெண்பால், பலர்பால் என்றும் அஃறிணைச் சொற்களை ஒன்றன்பால், பலவின்பால் என்றும் பிரித்து தெளிவுபடுத்தியுள்ளார். வேற்றுமை வகைகளும் சொல்லின் முதல், ஈறு, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனும் ஆறு உறுப்புகளும் பெயர், வினை எச்சங்களும் இடை உரிச்சொற்களும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
சொல்லின் இலக்கணத்தைக் கூறுவதுடன் இயற்சொல், திசைச்சொல், திரிசொல், வடசொல் ஆகிய நான்கும் ஆறுவகை தொகைகளும் பத்து வகை எச்சங்களும் சொல் மரபுகளும், அவை ஆளும் முறைகளும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியர் குறிப்பிடும் திணை, பால் பாகுபாடுகள் அனைத்தும் பகுத்தறிவுக்கு உட்பட்டதாகவே கருதுகிறார்கள்.
பொருளதிகாரம்
பிறமொழிகளுக்கு இல்லாத தனிசிறப்பு தமிழ்மொழிக்குப் பொருளதிகாரம் இருப்பதாகும். இலக்கியத்தில் அமையும் சொற்களுக்குப் பொருள் கூறும் இலக்கணப் பகுதியே பொருளதிகாரம் என்கிறார்கள். மனித வாழ்க்கை கூறுகளாகிய அகம், புறம், களவு, கற்பு, மரபு போன்ற முதன்மையான தகவல்களைப் பொருளதிகார நூற்பாக்கள் தெரிவிக்கின்றன.
அகத்திணையியல், கற்பியல், பொருளியல், புறத்திணையியல், களவியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்து 656 நூற்பாக்களில் பொருளதிகாரத் தகவல்களைத் தொல்காப்பியர் விவரிக்கிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் நிலப்பகுப்புகளையும், முதல், கரு, உரிப்பொருள்கள் பற்றிய சிறப்புகளையும் தொடல்காப்பியர் கூறியுள்ளார். அகப்பொருள் ஏழு வகைப்படும் எனக் கூறியுள்ளார்.
முற்படக் கிளந்த எழுதிணை என்ப”
என்கிறது தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் முதல் நூற்பா. ஏழுதிணை ஒழுக்கங்களில் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் ஆகும். கைக்கிளை என்பது ஒருதலைக் காமம் என்கிறது தொல்காப்பியம்.
அக வாழ்க்கை களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என இரு வகைப்படும். களவு வாழ்க்கை என்பது தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ஒருவருக்கொருவர் அன்பை வளர்த்துக் கொள்வது. கற்பு வாழ்க்கை என்பது திருமணத்திற்குப் பின்பு கூடியும் ஊடியும் வாழும் வாழ்க்கையாகும். இதைத்தான் தொல்காப்பியர் அகத்திணையியலில் விளக்கியுள்ளார். இப்படி ஒவ்வொரு இயலும் மனித வாழ்க்கையொடு, உயிரோடு, இயற்கையோடு தொடர்புடைய செயல்களுக்குப் பொருள் ஆய்ந்து விளக்குகின்றன.
தொகுப்புரை
தொல்காப்பியத்தை மூன்று அதிகாரங்களாகப் பிரித்து அதிகாரத்திற்கு ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளார் தொல்காப்பியர். மொத்தமுள்ள 27 இயல்களில் இயலுக்கு எத்தனை நூற்பாக்கள் தொல்காப்பியர் இயற்றினார் என்ற உண்மையை அறியமுடியவில்லை. காரணம் உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்களின் நூற்பா எண்ணிக்கையில் வேறுபடுகின்றனர். சில உரையாசிரியர்கள் சில நூற்பாக்களை இரண்டாகவும் மூன்றாகவும் பிரித்துக் கூறுகிறார்கள். அதனால் அவரவர் கற்ற தொல்காப்பிய உரைநூலில் குறிப்பிட்ட நூற்பா எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
CURRENT AFFAIRS தேதி வாரியாக பார்க்க விரும்புகிறீர்களா
Current Affairs (Click here)
கருத்துகள்
கருத்துரையிடுக