முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகத்தியம் - அகத்தியர் வரலாறு

சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழை உபதேசித்தார் என்றும் அம்மொழியை அகத்தியர் உலகுக்குத் தந்தார் என்றும் கம்பராமாயணம் கூறுகிறது. இதையே "ஆதியில் தமிழ்நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகன்” எனச் சேனாவரையர் தொல்காப்பியம் உரையின் கடவுள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் இலக்கண அறிவுடையவர் என்றும் நக்கீரருக்கு இவரே இலக்கணத்தை அறிவுறுத்தியதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அகத்தியத்தை இவரே எழுதியிருக்க முடியும் என்கிறார்கள். இந்நூல் 12,000 நூற்பாக்கள் கொண்டது என்று பலரும் கூறியுள்ளனர். முத்தமிழுக்கு இலக்கணம் கூறும் நற்றமிழ் நூலாக விளங்கும் தொல்காப்பியத்திற்கு மூல நூலாக இருந்தது அகத்தியமே என்கிறார்கள். அகத்திய வெண்பா, அகத்திய மணி 4000, உள்ளிட்ட 26 நூல்களை அகத்தியர் இயற்றியுள்ளார் என்றும் இவரது மனைவி லோபா முத்திரை என்றும் கூறுகிறார்கள். அகத்தியம் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்று சிலர் கூறியுள்ளனர்.

"ஆனாப்பெருமை அகத்தியன் என்னும்
அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்
பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்"

என்கிறது பன்னிரு படலம் பெருந்தொகை 1387ஆம் செய்யுள். அகத்தியர் சந்தனப் பொதிகையில் செந்தமிழ் வளர்த்தவர் என்றும் கும்பமுனி என்றும், மனித நிலையில் இருந்து கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டவர் என்றும் பாராட்டப் பெறுவதுண்டு. இவர் முதற் சங்கத்தின் தலையாயப் புலவர் என்று பலரும் குறிப்பிடுவதால் இவர் முதற்சங்க காலத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

அகத்தியர் - தமிழ் முனிவர் வரலாறு
அகத்தியர்
பிரபல கட்டுரைகள்

இமயமலையில் அகத்தியர் வாழ்ந்த இடத்தில் "அகத்திய வடம்” என்றொரு தீர்த்தம் இன்றும் உள்ளது என்பார்கள். தெற்கே இவர் வாழ்ந்த பொதிகை மலையை "அகத்திய வசம்" என்று அழைக்கப்பெறுகிறது. நாசிக் எனும் ஊரில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள "பஞ்சவடி" எனும் ஆசிரமத்தில் அகத்தியர் வாழ்ந்தார் என்று இராமாயணம் கூறுகிறது. தமிழ்நாட்டில் வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள அகத்தியப் பள்ளியில் அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. திருக்குற்றாலக் கோயிலை இவரே வெளிப்படுத்தினார். அதனால்தான் அக்கோயிலில் இவருக்குச் சன்னதி உண்டு என்கிறார்கள்.

அகத்தியர் வடக்கிலிருந்து தென்திசைக்கு வருகின்றபோது சிவபெருமானிடம் “தென்னாடு தமிழ் வழங்கு நாடு" என்பதால் எனக்குத் தமிழின் இலக்கணத்தை உணர்த்துக என வேண்டியுள்ளார். அகத்தியரின் வேண்டுகோளுக்கேற்ப, சிவபெருமான் எழுத்து, சொல், பொருள் முதலான இலக்கணத்தை அருளினார் என்ற செய்திகளைத் திருவிளையாடற் புராணம் கூறியுள்ளது.

"ஆதரம்சேர் குறுமுனியும் எனை யொன்றாக்கி
அருள் செய்தாய் அருள்செய்த படியே செய்வல்
ஒதரும் தென்பூமி தமிழ்ப்பூமி என்பார்
ஒண்தமிழிற்கு உரியவெலாம் அடிமைக்கு இங்கே
போதமுற அறிவித்தல் வேண்டும் என்று
போற்றுங்கால் எழுத்துச் சொற்பொருள் முன்னான
நீதியுடைச் சூத்திரங்கள் அறியும் வண்ணம்
நெறியின் கண் அறிவித்தாய் நேசம் கூர்ந்தே"

இப்பாடல் பழைய திருவிளையாடல் புராணத்தில் உள்ளதாக கே.எஸ்.சீனிவாசப்பிள்ளை தமிழ் வரலாறு நூலில் கூறியுள்ளார். இதன்மூலம் அகத்தியர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே தமிம்மொழி தமிழகத்தில் வளர்ந்துள்ளது என்று கூறுவது தமிழ்மொழியின் தொன்மையை உணர்த்துகிறது.

சிவபெருமான் பார்வதி திருமணக் கோலத்தைத் தரிசிக்க முடியவில்லை என அகத்தியர் வருந்திய போது, சிவபெருமான் எங்களுடைய திருமணத்தை நீ அங்கிருந்தே காணலாம் என்று அருளினார் எனப் புராணங்கள் கூறியுள்ளன. நல்லூர், திருமணஞ்சேரி, திருவீழிமிழலை, ருத்ரகங்கை, அம்பல், திருமடைக்காடு, எடும்பாவனம், பாபவிநாசம் ஆகிய இடங்கள் அகத்தியர், சிவபெருமான் பார்வதி திருமணக் காட்சியைக் கண்ட இடங்களாக உ.வே.சாமிநாத ஐயர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் தென்னாட்டில் இருந்தபோது அவரின் கமண்டல நீரைக் காகம் கவிழ்த்துவிட அந்நீர்க் காவிரியாக ஓடியது என்று சிவப்பிரகாச சுவாமிகள் "பிரபுலிங்க லீலை" நூலில் குறிப்பிடுகிறார்.

"அமரமுனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை"

என்கிறது மணிமேகலை கடவுள் வாழ்த்து 11, 12ஆம் அடிகள். அகத்தியர் தமிழன் என்பதோடு பாண்டிய மரபாகிய திங்கள் மரபைச் சேர்ந்தவன் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அகத்தியரின் மாணாக்கர்

அகத்தியரின் மாணாக்கர் 1.தொல்காப்பியர், 2. அதங்கோட்டாசான், 3. வாய்ப்பிகன், 4. செம்பூட்சேய், 5. தூராலிங்கன், 6. பனம்பாரன், 7. கழாரம்பன், 8. வையாபிகள், 9. அவிநயன், 10. காக்கைபாடினி, 11. வாமனன், 12. நற்றத்தன் ஆகியோர் ஆவர். இவர்கள் இயற்றிய நூலே பன்னிருபடலம் என்பதை

"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன்"

என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை சிறப்புப் பாயிரம். அகத்தியருக்குத் தொல்காப்பியர்தான் முதல் மாணவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அகத்தியம்

அகத்தியரைப் பற்றி பழங்கதைகள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், காஞ்சிப்புராணம், திருவிளையாடற் புராணம், போன்ற நூல்களில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் அகத்திய நூற்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"இலக்கிய இன்றி இலக்கண இன்றே
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே
எள்ளின் எண்ணெய் எடுப்பது போல்
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்"

என்கிறது ஓர் அகத்திய நூற்பா, செய்யுள் நூல்கள் தோன்றிய பிறகே இலக்கண நூல்கள் எழுந்தன என்று கூறுகிறது. இது அகத்திய நூற்பா இல்லை என்பாரும் உண்டு.

அகத்தியரால் எழுதப்பட்ட அகத்தியம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், சோதிடம், காந்தருவம், கூத்து முதலியனவாகும். 12,000ஆயிரம் நூற்பாக்களைக் கொண்ட இந்நூல் முதல் சங்க, இடைச்சங்க நூல்களுக்கு இலக்கண நூலாகத் திகழ்ந்துள்ளது என அறியமுடிகிறது. கடைச்சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் இலக்கண நூலாகத் திகழ்ந்தமையால் தொல்காப்பியத்திற்குப் பின் அகத்தியம் செல்வாக்கிழந்ததாகக் கூறுகிறார்கள். இப்போது அகத்தியம் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. உரையாசிரியர்கள் கையாண்ட சில நூற்பாக்கள் கிடைத்துள்ளன. அகத்தியம், தொல்காப்பியத்திற்கு முன் பழந்தமிழ் இலக்கண நூலாக இருந்தது எனும் கருத்து உறுதியானது.

அகத்தியர் எனும் பெயரில் பலர் பலகாலக்கட்டங்களில் பல இடங்களில் வாழ்ந்துள்ளார்கள் என்ற கருத்தும் உண்டு. இவர்களில் சிலர் தமிழர், சிலர் ஆரியர் என்றும் குறிப்பிடுகிறார்கள். அகத்தியம் இயற்றிய அகத்தியர் தமிழ்மொழியில் இலக்கண இலக்கியப் புலமையும் நிறைந்த அறிவும் கொண்டவர் என்பது மட்டும் தெளிவாகிறது.

பிரபல கட்டுரைகள்

தொகுப்புரை

தொல்காப்பிய நூற்பாவில் என்மனார் புலவர் எனறு தொல்காப்பியர் கூறியிருப்பது அவருக்கு யாரோ ஒருவர் தமிழ்மொழியைக் கற்றுக் கொடுத்துள்ளார் என்றும் தொல்காப்பியருக்கு முன்பே தமிழ்மொழி மக்கள் பயன்பாட்டில் இருந்தது என்றும் உணரமுடிகிறது.தமிழ் மொழியின் இவ்வரலாற்றை உரிய இலக்கியச் சான்றுகளுடன் யாரும் மறுத்ததாகத் தெரியவில்லை. மறுத்தவர், தமிழ்மொழியின் பிறப்பு வரலாற்றையும் தொல்காப்பிய என்மனார் புலவர் என்பதையும் உரிய இலக்கிய சான்றுகளுடன் விளக்கியதாகத் தெரியவில்லை. எனவே தமிழ்மொழி அகத்தியர் வழி வந்தது என்பதை ஏற்பதில் தவறில்லை.

CURRENT AFFAIRS தேதி வாரியாக பார்க்க விரும்புகிறீர்களா

Current Affairs (Click here)

கருத்துகள்

📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW

Popular

ராஜாராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்

திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.   கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...

ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு

English Summary: This post discusses Avvaiyar’s reflective poem "Vaan Kuruviyin Koodu" (The Nest of the Sky Bird), which explores themes of simplicity, detachment, and the impermanence of material life. Through the imagery of a bird’s nest, Avvaiyar conveys deep philosophical insights about living with minimal needs and embracing spiritual freedom. ஆசிரியர் அறிமுகம்: ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி த...

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார்

Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar  ஆசிரியர் அறிமுகம் எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர். கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன. கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம். பாரதியார் பாடல் குறிப்பு சமுதாயம் என்பதற்...

முதல் நூற்பா கட்டுரை - கலைஞர் மு. கருணாநிதி

நூல் அறிமுகம் தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது. தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கல...

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை

முகப்பு › 1st Year - Tamil › புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை. தோற்றமும் வளர்ச்சியும் 1930-45 மணிக்கொடியும், 1950 முதல் 1970 வரை எழுத்துப் பரம்பரையும், 1971 முதல் வானம்பாடியும் புதுக்கவிதை உலகை ஆக்கிரமித்தன. வால்ட் விட்மனும், எஸ்ராபவுண்டும், பிரான்ஸ் நாட்டின் ரிம்போவும் வெளிப்படுத்திய இப்புதிய கவிதை உலகத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இருவர் பாரதியும், பிச்சமூர்த்தியும். இவர்கள் காலந்தான் புதுக்கவிதையின் தொடக்ககாலம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இவர்களால் தமிழ்க்கவிதை உலகில் 'இதுதான் கவிதை' எனும் இலக்கணம் மாறியது. எதுதான் கவிதை இல்லை? எனும் புது இலக்கணம் உருவாகியது. இதனை ந.வீ.செயராமன் 'மனம் என்னும் இருட்டறைக்குள் முடங்கி முடமாகக் கிடந்த கற்பனைகள் வானம்பாடிகளாய்ச் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன இன்றைய புதுக்கவிதையாய். உலகின் அப்பட்டமான உண்மை நிலை இது என்பர். புதுக்கவிதை படைத்தோர் பாரதியார் பாரதியின் வசன கவிதை புதிய முயற்சி எனும் வகையில் வரவேற்கத்தக்கது. 'எல்லா உயிரும் இன்பமெய்துக! எல...