தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடமாகவும் தெற்கெல்லை குமரி முனையாகவும் கிழக்கு, மேற்கு, எல்லைகள் கடல்களாகவும் உள்ளன. இவ்வெல்லைகளுக்குள் "சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, நடுநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு” எனப் பிரிக்கப்பட்டிருந்தன. சேர, சோழ, பாண்டிய நாடுகளை முடிமன்னர்களும் பிற நாடுகளைக் குறுநில மன்னர்களும் ஆட்சிபுரிந்தனர். இவர்கள் தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்து தமிழராக இருந்தக் காரணத்தினால்தான், நமது மொழியையும் நாட்டையும் தங்கள் உயிராகக் கருதிக் காத்துள்ளனர்.
சங்கம் நிலவிய காலம்
தமிழக அரசர்களாகிய சேர, சோழ, பாண்டியரையும் இன்னும் பல சிற்றரசர்களையும் குறிப்பிடும் சங்க நூல்கள், பல்லவர்களைப் பற்றி சிறிதும் குறிப்பிடவில்லை. பல்லவர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆட்சிபுரிந்துள்ளனர். எனவே சங்ககாலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தியதாக இருக்க வேண்டும். சங்ககால மக்கள் கிரேக்கரோடும், எகிப்தியரோடும், ரோமானியரோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. மெகஸ்தனிஸ், டாலமி, பிளினி போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் எழுதிய குறிப்புகள் இந்த உண்மையை வற்புறுத்துகின்றன. மேலும் கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட கிரேக்க, ரோம் நாணயங்களும், அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கிடைத்த புதைபொருள்களும் சங்க நூல்களின் கூற்றுக்குச் சான்று பகருகின்றன. எனவே அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்றாலும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் கி.பி.முதல் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமே சங்க காலமாகும்.
முச்சங்கங்கள்
மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தச் செய்திகளைத் தொன்றுதொட்டு வரும் தமிழ் நூல்கள் பலவற்றில் காண்கிறோம். தலைச்சங்கம் கடலுட்பட்ட குமரி பஃறுளி நாடுகள் அமைந்த தென்மதுரையிலும் இடைச்சங்கம் அதேயிடமான கபாடபுரத்திலும், கடைச்சங்கம் வைகைக்கரை எனும் இன்றைய மதுரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வு பெற்றிருந்தன என்பது நெடுநாளைய தமிழ் நூல்களின் கூற்று. முச்சங்கங்கள் பற்றிய முழுத்தகவல்கள் இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
தலைச்சங்கம்
கடல்கோள்களால் அழிந்ததாகக் கருதப்படும் தென்மதுரையில் தலைச்சங்கத்தைப் பாண்டியன் காய்சினவழுதி நிறுவினான். காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை 89 மன்னர்கள் இச்சங்கத்தைக் காத்தனர். இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக 549 பேர் இருந்தனர். 4440 புலவர்கள் பாடல்கள் இயற்றி உள்ளனர். சிவபெருமான், முருகன், அகத்தியர், மார்கண்டேயன், வால்மீகி, கௌதமர் போன்றோர்கள் இச்சங்கத்தில் குறிப்பிடத்தக்கப் புலவர்கள் ஆவர். இச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்து இருந்ததாகக் கருதப்படுகிறது.
இடைச்சங்கம்
கபாடபுரத்தில் இச்சங்கம் அமைந்திருந்தது. பாண்டியன் வெண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை 59 மன்னர்கள் இச்சங்கத்தைக் காத்தனர். இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக 59 பேர் இருந்தனர். 3700 புலவர்கள் பாடல்கள் இயற்றியுள்ளனர். இவர்களில் அகத்தியர், தொல்காப்பியர், மோசி, வெள்ளூர்க் காப்பியன், திரையன் போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். கவியும், குருகும், வெண்டாளியும், வியாழன்மாலை அகவலும் இச்சங்க நூல்கள் ஆகும். இச்சங்கம் 3700 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தது. அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூத புராணம் போன்ற இலக்கண நூல்கள் இச்சங்கப் படைப்புகளாகும்.
கடைச்சங்கம்
தற்போதுள்ள மதுரையில்தான் கடைச்சங்கம் இருந்தது. முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பாண்டிய மன்னர்கள் இச்சங்கத்தைக் காத்துள்ளனர். இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடை அரசனார், இளந்திருமாறன், நல்லந்துவனார், பெருங்குன்றூர் கிழார், நக்கீரர் உள்ளிட்ட 49 பேர் அவைப் புலவர்களாக இருந்தனர். இச்சங்கத்தில் 449 புலவர்கள் பாடல்கள் இயற்றியுள்ளனர். அகத்தியமும் தொல்காப்பியமும் இலக்கண நூலாக விளங்க, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்துவரி போன்ற இலக்கிய நூல்கள் இச்சங்கத்தில் இயற்றப்பட்டன. கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்திருந்ததாகக் கூறுகிறார்கள்.
சங்கம் இருந்தமைக்குச் சான்றுகள்
தொடக்கக் காலத்தில் தமிழ்மொழி மதுரையை ஆண்ட மன்னர்களால் சங்கம் வைத்து வளர்க்கப்பட்டது என்றும் அச்சங்கங்கள் மூன்று என்றும் இலக்கிய சான்றுகள் வழி அறியமுடிகிறது. சிலர் சங்கம் இல்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்கள். சங்கங்கள் இருந்தமைக்கான சான்றுகள் இருப்பதை அறியலாம்.
"இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கடல் தண்கோல் வேந்தே"
- புறநானூறு (58)
"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொரு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை”
- புறநானூறு (72)
"தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்தனை மருகின் மதுரை"
- சிறுபாணாற்றுப்படை (66-67)
"தொல்லானை நல்லாசிரியர்
புணர்கட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலத்தரு திருவின் நெடியோன்"
- மதுரைக்காஞ்சி (761-763)
"நில்னாவிற் திரிதருஉம் நின்மாடக் கடலார்
புலனாவிற் பிறந்தசொல் புதிண்ணும் பொழுதன்னோ"
- கலித்தொகை (85)
"மதிமொழியிடன்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவிசெறு வாக
மதுமொழி நீராப் புலனா உழவர்
புதுமொழி கட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர்"
- கலித்தொகை (68)
"பொத்தியாண்ட பெருஞ்சோழ னையும்
வித்தையாண்ட விளம்பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று"
- பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்துப் பதிகம்
"சங்க முத்தமிழ்" - ஆண்டாள் பெரியதிருமொழி
"சங்க முத்தமிழே சங்க மலிதமிழ்" - திருமங்கையாழ்வார்
"சங்கத் தமிழ் மூன்றும் தா” - ஔவையார்
"தலைச்சங்கப் புலவரானார் தம்முன்" - பெரியபுராணம்
"புகலி ஞானசம்பந்தன் உரைசெய் சங்கமலி செந்தமிழ்"
- திருஞானசம்பந்தர் தேவாரம்
“தன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக்
கிழிதருமிக் கருளினோன் காண்"
- திருநாவுக்கரசர் தேவாரம்
"மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்"
- சின்னமனூர் செப்பேடு
சங்கம் இல்லை - மறுப்பு
பேராசிரியர் கே.எஸ். சிவராமபிள்ளை, பேராசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார், பேராசிரியர் வையாபுரிபிள்ளை போன்றோர்கள் சங்கம் அக்காலத்தில் இல்லை என்று மறுக்கின்றனர். இவர்கள் சங்கம் என்ற சொல் இல்லாதிருந்த காலத்தில் சங்கம் இருந்திருக்க இயலாது என்கிறார்கள். மதுரை என்ற சொல்லும் தமிழுக்குரிய சொல்லன்று. தொல்காப்பிய நூற்பா சகரம் அகரத்தோடு சேர்ந்து மொழிக்கு முதலில் வராது என்று குறிப்பிடுவதால் சங்கம் என்ற சொல் அக்காலத்தில் இல்லை என்பது தெளிவாகிறது என்கிறார்கள். சங்க இலக்கியங்களிலும் சங்கம் என்ற சொல் இல்லை. போர்கள் நிறைந்த அந்தக் காலத்தில் பலநாட்டுப் புலவர்கள் ஒன்று கூடித் தமிழ் ஆய்ந்தனர் என்பதில் உண்மை இல்லை என்கிறார்கள். இறையனார் களவியல் உரை தரும் செய்திகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை என்கிறார்கள். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்திருப்பின் பழந்தமிழ் இலக்கியங்களில் சங்கம் பற்றிய குறிப்புகள் இல்லாதது ஏன் என்று வினவுகின்றனர்.
அகத்தியம் முதல் நூல் என்றால் அதற்கு முன்பே பல இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும் ஆனால் அவற்றைப் பற்றி எந்தத் தவகலும் இல்லை என்கிறார்கள்.
சங்கங்கள் பற்றிய விவரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கூறியிருப்பது கற்பனைக்கு உதவுமே தவிர கணக்கிற்கு உதவாது என்கிறார்கள்.
முச்சங்கங்களில் இருந்ததாகக் கருதப்படும் அரசர்கள், புலவர்கள் எண்ணிறைந்த ஆண்டுகளில் வாழ்ந்ததாகக் கூறப்படுவது ஏற்புடையதல்ல. மேலும் தொல்காப்பியம், தவிர தலை, இடைச் சங்கத்து நூலாக எதுவும் இதுவரை நமக்குக் கிடைக்கப்பெறவில்லை. இப்படி பலவிதக் கருத்துக்களைக் கூறிச் சங்கம் இல்லை எனச் சிலர் மறுக்கின்றனர்.
பிரபல கட்டுரைகள்
ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு
16 ஏப்ரல் 2025
ஹைக்கூ கவிதைகள்: தமிழில்
16 ஏப்ரல் 2025
தொல்காப்பியம் குறிப்புகள் மற்றும் அமைப்பு
30 ஜூன் 2025
மு.வ. தம்பிக்கு: முதல் 2 கடிதங்களின் சுருக்கம்
14 ஏப்ரல் 2025
ஆய்வாளர்களின் கருத்து
சங்கம் என்ற சொல் வடசொல் என்பவர் பட்டிமன்றம், கழகம், கூடல் முதலிய சொற்கள் வழங்குவதை அறிய வேண்டும். சங்கக் கட்டடமே பட்டி மண்டபம் எனப்பட்டது. மேலும் சங்கம் வடசொல் என்பவர்கள் அது வடசொல் தானா என்று ஆராய வேண்டும். வடமொழி ஒத்த பிற ஆரியமொழிகள் எதனினும் அச்சொல் இல்லை. எனவே தூய ஆரியச் சொல் அல்லாத பெரும்பாலான வடமொழிச் சொற்களில் இதுவும் ஒன்று என்பதை அவர்கள் அறிய வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தொல்காப்பியம், முத்தொள்ளாயிரம், புறநானூறு, கடைச்சங்க நூல்களாயினும் அதில் சேராத சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகியவற்றில் நாம் அறியும் மொழி, கலை, பண்பாடு போன்றன கடைச்சங்க நூல்களில் காணப்படாதவை என்பதால் இடைச்சங்கம் இருந்தது உண்மை எனலாம். அடியார்க்கு நல்லார் பெருங்கதை எழுதிய கொங்குவேள் ஆகியோர் காலம் வரை இடைச்சங்க நூல்களான குருகும் பெருநாரையும் வெண்டாலியும் இருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில் அவற்றைக் கற்றே கொங்குவேள் பெருங்கதை எழுதியதாக அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். பெருங்கதை மொழிவழக்கும் செய்யுட் வழக்கும் கடைச்சங்க வழக்கில் இருந்து வேறுபட்டுள்ளதை டாக்டர் உ.வே.சா எடுத்துக் கூறியுள்ளதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடைச்சங்க இலக்கியங்களில் காணப்படும் வரலாற்றுச் செய்திகள் இலக்கியமுறை, மொழிநிலை, பண்பாடு, கலைவளம் ஆகிய அனைத்தும் பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் எதிலும் காணப்படவில்லை. இது ஒன்றே கடைச்சங்கம் இருந்தது என்பதற்குச் சான்று என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிரான்சைத் தவிர நவீன மேலைநாடுகளில் கூட திட்டம் வகுத்து மொழி வளர்க்கும் அமைப்பு இல்லைதான் என்றாலும் தமிழர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததாகத் தமிழுக்கே உரிய சிறப்பாக ஏன் கருதக்கூடாது. சங்கங்களின் மெய்மையை ஒப்புக் கொள்ள விரும்பாதவர்களின் கூற்று முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொகுப்புரை
சங்கம் என்ற அமைப்பு இல்லாமல் தொல்காப்பிய இலக்கணத்தைத் தொடக்க காலத்தில் ஒரு தனிமனிதரால் நடைமுறைபடுத்தியிருக்க முடியாது. சங்கத்தில் இருந்தப் புலவர்கள் இலக்கணப்படி நூல்களை ஆய்ந்து அனுமதித்த பிறகே நூல்கள் சங்கத்தால் அரங்கேற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதனால்தான் சங்க காலத்தில் தோன்றிய நூல்களும் அதனைத் தொடர்ந்து எழுந்த நூல்களும் இலக்கண கட்டமைப்புடன் இருப்பதைக் காணமுடிகிறது.
சங்க மறுப்பாளர்கள் தொல்காப்பிய இலக்கணம் யாரால், எப்படி, புலவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நடைமுறைபடுத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் இதுவரை விளக்கப்பட்டதாகக் தெரியவில்லை. சாட்சியோ, தடயமோ இல்லாமல் ஓர் உண்மை உண்மையாக இருக்கமுடியாது எனும் வாதம் ஏற்புடையதல்ல. நெருப்பில்லாமல் புகையாது. சங்கம் பற்றிய சில செய்திகள் மிகையாக இருக்கலாம் ஆனால் சங்கமே இல்லை என்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை.
CURRENT AFFAIRS தேதி வாரியாக பார்க்க விரும்புகிறீர்களா
Current Affairs (Click here)
கருத்துகள்
கருத்துரையிடுக