சங்க இலக்கியம்
சங்க காலத்தை மூவேந்தர் ஆட்சிக்காலம், இயல்புணர்ச்சிக் காலம், செவ்வியல் நெறிக்காலம் என்றெல்லாம் அழைக்கின்றோம். சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலம். கருப்பொருளைச் சார்ந்து மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்ட காலம். அதனால்தான் அறநெறிக் காலம், சமயநெறிக் காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக் காலம் போன்றவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட காலம் என்கிறார்கள். சங்ககாலத்தில் எழுந்த இலக்கியங்களில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் குறிப்பிடத்தக்கனவாகும்.
கற்பனை வளமும் கருத்துச் செறிவும் ஒருங்கே பெற்ற ஓர் அரியப் படையல் சங்க இலக்கியம். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை முறையாகப் படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாக உள்ளது. சங்க இலக்கியம் மக்கள் பலமுறை படித்துப் பயன்பெற வேண்டிய இலக்கியச் சோலையாகும். புறத்தே தோன்றும் காட்சிகளையும் அகத்தே தோன்றும் கருத்துகளையும் புனைந்து நிற்கும் அழியாத தமிழ் அழகோவியம். காதலையும் வீரத்தையும் சங்க இலக்கியம் தமிழர்களின் இரு கண்களாகக் காட்டுகிறது. காதலும் போரும் சங்க இலக்கியங்களின் கருத்தாகவும் சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும் அறிவியலும் மனிதவியலும் இக்கால இலக்கியங்களின் கூறாகவும் அமைந்துள்ளன என்கிறார் பூரணலிங்கம்.
எட்டுத்தொகை நூல்கள்
சங்க இலக்கியம் என்பது, பாட்டும் தொகையும் என்று கூறப்படும். பாட்டு என்பது பத்துப்பாட்டையும் தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். அவை தனிப்பாடல்களாகவும் நெடும்பாடல்களாகவும் அமைந்திருந்த அடிப்படையில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று தொகுக்கப்பட்டுள்ளன. எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களையும் பத்துப்பாட்டு என்பது பத்து நூல்களையும் கொண்டதாகும். இவை பதினெண்மேல்கணக்கு நூல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை”
என்று ஒரு பழம் பாடல் பட்டியலிட்டுள்ளது. இந்நூல்களுள் ஐந்து நூல்கள் அகம் பற்றியும் இரண்டு நூல்கள் புறம் பற்றியும் ஒரு நூல் அகப்புறம் பற்றியும் கூறுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் ஏறத்தாழ 2360 பாடல்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட இருபாற் புலவர்கள் இப்பாடல்களை இயற்றியுள்ளனர்.
குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களும் அகநூல்களாகும். பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரு நூல்களும் புறநூல்களாகும். பரிபாடல் வையைப் பற்றிய அகப்பாடலும், செவ்வேள், திருமால், பற்றிய புறப்பாடலும் பெற்றுள்ளதால் இந்நூலை அகப்புற நூலாகக் கருதுகிறார்கள்.
குறுந்தொகை - அகநூல்
நூலமைப்பு
நல்ல குறுந்தொகை என்று அழைக்கப்படும்போதே இதன் சிறப்பு புலனாகும். நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் (04-08) கொண்ட இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்களைக் கொண்டது. 205 புலவர்கள் பாடிய இப்பாடல்களைத் உப்பூரிக்குடிக்கிழார் தொகுத்துள்ளார். இதில் 307, 309ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவையாகும். இந்நூலினைத் தொகுக்கச் செய்தவர் பூரிக்கோ என்பது குறிப்பிடத்தக்கது. குறிஞ்சித் திணையில் 145 பாடலும் முல்லைத் திணையில் 45 பாடலும் மருதத் திணையில் 50 பாடலும் நெய்தல் திணையில் 71 பாடலும் பாலைத் திணையில் 90 பாடலும் அமைந்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் அகவல் பாக்களால் அமைந்தவை. பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்.
கருத்துச் சூழல்
![]() |
| தலைவன் தலைவி |
குறுந்தொகை பாடல்களில் சங்ககால மக்களின் வாழ்க்கை முறைகள், ஊர்களின் அமைப்பு முறைகள், மக்களுடைய செயல்பாடுகள், இயற்கை வள வருணனைகள் உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் காணமுடிகிறது. ஒருமித்த உள்ளமும் உண்மையான அன்பும் காதல் திருமணத்திற்கு அடிப்படை என்பதை உறுதி செய்யும் செயல்கள். இல்வாழ்க்கையில் அமைதி நிலைக்கவும் உள்ளத்தில் இன்பம் பூக்கவும் தேவையான பண்புகளைத் தலைவன் தலைவி கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே”
என்கிறது குறுந்தொகை 40ஆம் பாடல். வெவ்வேறு இடங்களில் பிறந்த தலைவனும் தலைவியும் காதலில் தோய்ந்து கருத்தொருமித்து ஒன்றுபடுகிறார்கள் என்பதையும் இவர்களுடைய பெற்றோர்களும் முன்பின் ஒருவரையொருவர் அறியாதவர்கள் என்பதையும் பாடல் புலப்படுத்துகிறது. சங்ககால மக்கள் காதலையும் வீரத்தையும் இரு கண்களாகக் கொண்டாலும் ஆடவர்கள் உலகியலைச் சார்ந்தும் பெண்கள் ஆடவர்களைச் சார்ந்தும் வாழ்ந்தார்கள் என்பதை
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
நமக்கு உரைத்தோரும் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே"
என்கிறது குறுந்தொகை 135ஆம் பாடல். இல்வாழ்க்கையில் பெண்கள் ஆணைச் சார்ந்தே இருந்துள்ளமையை எடுத்துக் காட்டுவதாகப் பாடல் அமைந்துள்ளது.
சிறப்புகள்
முதல், கருப் பொருட்களைக் காட்டிலும் உரிப்பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்பட்டுள்ள பாடல்களே மிகுதியாக உள்ளன. குறுந்தொகைப் பாடல்களில் வருணனைகள் குறைந்தும் உணர்ச்சிப் பெருக்குகள் மிகுந்தும் காணப்படுகின்றன. இந்நூலில் பத்துப் பாடல்களை இயற்றியவர்கள் பெயர் தெரியாததால் அப்பாடல்களின் கருத்தாழமிக்க சொற்றொடர்களையே பாடலின் ஆசிரியர் பெயராகச் சூட்டியுள்ளனர். குறுந்தொகையில் பரணர் பாடிய பாடல்களில் பல வரலாற்றுக் குறிப்புகள் மிளிர்வதை அறியமுடிகிறது. அள்ளூர்நன்முல்லையார், ஆதிமந்தியார், ஊண்பத்தை, ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், கச்சிபேட்டு நன்னாதையார், பூங்கனுத்திரையார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், வருமுறையார்த்தி, வெள்ளி வீதியார் ஆகிய 11 பேர் குறுந்தொகையில் பாடல்கள் பாடிய பெண்பாற் புலவர்கள் ஆவார். இந்நூலைக் கி.பி.1915ஆம் ஆண்டு முதற்பதிப்பு செய்தவர் கண்ணபுரத் தலத்தான் திருமாளிகைச் சௌரிப் பெருமாள் அரங்கன் ஆவார்.
நற்றிணை - அகநூல்
நூலமைப்பு
எட்டுத்தொகை நூல்களை அறிமுகம் செய்யும் வெண்பாவில் முதல் நூலாக இடம் பெறுவது நற்றிணை ஆகும். ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரெண்டடிப் (09-12) பேரெல்லையையும் கொண்ட இந்நூலைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவான். 187 புலவர்கள் பாடிய இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்களைக் கொண்டது. இதில் அடியளவில் மூன்று பாடல்கள் வேறுபடுகின்றன. இந்நூலினைத் தொகுத்தவர் யாரென்று அறிய முடியவில்லை. இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார். குறிஞ்சித் திணையில் 131 பாடலும் முல்லைத் திணையில் 29 பாடலும் மருதத் திணையில் 32 பாடலும் நெய்தல் திணையில் 101 பாடலும் பாலைத் திணையில் 106 பாடலும் இடம் பெற்றுள்ளன. இதில் 234ஆம் பாடலும் 285ஆம் பாடலின் பிற்பகுதியும் கிடைக்கவில்லை. 56 பாடல்களை இயற்றியவர்கள் பெயர் தெரியவில்லை.
கருத்துச் சூழல்
![]() |
| அடைக்கலமாக வந்தவரின் துன்பத்தைக் கண்டு அஞ்சும் மென்மை |
நற்றிணைப் பாடல்களில் சங்ககால மக்களின் வாழ்க்கை முறைகள், மன்னர்களின் ஆட்சித்திறன், கொடை, ஒருமைப்பாடு, புலவர்களின் உவமைத்திறன், உள்ளுறை, இறைச்சிப் பொருள்களின் அமைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. அடைக்கலமாக வந்தவரின் துன்பத்தைக் கண்டு அஞ்சும் மென்மை பாங்கே சிறந்த செல்வமென்று உரைக்கிறது கீழ்க்காணும் பாடல்.
செல்வம் அன்று, தன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வம் என்பதுவே"
என்கிறது நற்றிணை 210ஆம் பாடல். சான்றோர்கள் செல்வம் என்று போற்றுவது தன்னிடம் அடைக்கலமாக வந்தவர்க்கு நேரும் துன்பத்திற்கு அஞ்சும் பண்பாகும். அவர் துன்பத்தை நீக்கும் பண்பை நீ அறிந்திலையோ என்கிறது பாடல். கொல்லாமை, அறவாழ்வு, நல்லொழுக்கக் கருத்துகளைக் கொண்ட எண்ணற்ற பாடல்களை நற்றிணையில் காணமுடிகிறது.
சிறப்புகள்
திணை எனும் சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள் என்பதால் நல்லொழுக்கம் பற்றி 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். சேர,சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றியும் அஞ்சி, ஆய், மலைமான், ஓரி முதலிய வள்ளல்களைப் பற்றியும் பழையன், திக்கன் முதலிய குறுநில மன்னர்களைப் பற்றியும் இந்நூல் குறிப்பிடுகிறது. மடல் பாடிய மாதங்கீரனார், விளிக்கட் பேதைப் பெருங்கண்ணினார், தேய்புரி பழங்கயிற்றினார், தும்பி சேர்கீரனார், தனிமகனார், மலையனார், வண்ணபுறச் சுந்தரனார் ஆகிய புலவர்கள் நற்றிணைப் பாடல்களால் பெயர் பெற்றவர்கள் ஆவர். இந்நூலைக் கி.பி.1914ஆம் ஆண்டு பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் முதற்பதிப்பு செய்துள்ளார்.
ஐங்குறுநூறு- அகநூல்
நூலமைப்பு
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து திணைகளுக்கும் திணைக்கு ஒரு புலவர் நூறு பாடல்கள் வீதம் ஐந்து புலவர்களால் பாடப்பெற்ற 500 பாடல்களைக் கொண்ட நூல் ஐங்குறுநூறு ஆகும். இந்நூலின் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் (03-06) கொண்டது. இதில் அடியளவால் இரண்டு பாடல்கள் வேறுபடுகின்றன. இந்நூலின் பாடல்களைப் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுத்துள்ளார், யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவர் தொகுப்பிக்கச் செய்துள்ளார். குறிஞ்சித் திணையில் 100 பாடல்கள் கபிலராலும் முல்லைத் திணையில் 100 பாடல்கள் பேயனாராலும் மருதத் திணையில் 100 பாடல்கள் ஓரம்போகியாராலும் நெய்தல் திணையில் 100 பாடல்கள் அம்மூவனாராலும் பாலைத் திணையில் 100 பாடல்கள் ஓதலாந்தையாராலும் பாடப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்.
கருத்துச்சூழல்
உவமையைப் பொருளாகவும் பொருளை உவமையாகவும் கூறும் மரபு ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கு உண்டு. வினை முடிந்து மீளும் தலைவன் கார்காலத்தின் முன் காட்டின் எப்பக்கம் பார்த்தாலும் தலைவியின் அங்கங்களாகத் தோன்றும் நிலையைக் கூறுவதாக
நன்னுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மாம்மருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனன்
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே”
என்கிறது ஐங்குறுநூறு 492 ஆம் பாடல். மருண்டமான் போன்ற அவள் கண்களும் கரியமேகம் போன்ற அவள் கூந்தலும் ஆடும் மயில் போல் அவள் சாயலும் அவன் மனதை நிலைதடுமாற வைத்தன என்கிறது பாடல். அத்தகைய காட்சிகளை ஒன்றுபடுத்திய தலைவன் தலைவியை உடனே காணத்துடிக்கிறான். இவ்வாறு தலைவன் தலைவியின் மனச்சூழலை ஐங்குறுநூறு பாடல்களில் மிகுதியாகக் காணமுடிகிறது.
சிறப்புகள்
ஐந்நூறு பாடல்களைக் கொண்ட இந்நூலில் ஒவ்வொரு திணைக்குரிய நூறு பாடல்களும் ஏதாவது ஒரு பொருளின் அடிப்படையிலோ அல்லது பாடல்களின் சொற்களின் அடிப்படையிலோ பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மருதத்திணை ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நூல் அமைந்தாலும் அகத்திணை ஒழுக்கம் பற்றி மிகுதியாகப் பேசுகிறது.
கொற்கை கோமான், குட்டுவன், கடுமான், மத்தி, விராஅன், அவினி, ஆதன் போன்ற அரசர்களையும் ஆமூர், கொண்டி, தேனூர், கழார், கொற்கை போன்ற ஊர்களையும் இந்நூலின் பாடல்களில் காணமுடிகிறது. அடியளவில் சிறியதாக இருந்தாலும் முதல், கரு, உரிப்பொருட்கள் பற்றி அனைத்தையும் இந்நூல் குறிப்பிடுகிறது. கி.பி.1903ஆம் ஆண்டு இந்நூலை உ.வே.சாமிநாத ஐயர் முதற்பதிப்பு செய்துள்ளார்.
அகநானூறு - அகநூல்
நூலமைப்பு
அகவாழ்க்கைப் பற்றி 400 பாடல்கள் கொண்ட ஒரே நூல் அகநானூறு. நெடுந்தொகை எனும் பெயரும் இதற்குண்டு. பாண்டியன் உக்கிரப் பெருவழுதி இந்நூலைத் தொகுப்பிக்கச் செய்துள்ளார். பதிமூன்றடிச் சிற்றெல்லையும் முப்பத்தோரடிப் (13-31) பேரெல்லையும் கொண்டது. இந்நூலை உப்பூரிக்குடிகிழார் மகன் உக்கிரப்பெருவழுதி தொகுத்துள்ளார். இந்நூலில் 22ஆம் பாடல் 13 அடியிலும் ஒரு பாடல் மட்டும் 31 அடியிலும் அமைந்துள்ளன. இந்நூலில் முதல் 120 பாடல்கள் களிற்றியானைநிரை என்றும் 121 முதல் 300 வரையுள்ள பாடல்கள் மணிமிடைப் பவளம் என்றும் 301 முதல் 400 வரையுள்ளப் பாடல்கள் நித்திலக்கோவை என்றும் அழைக்கப்படுகின்றன. இப்பாடல்களை 145 புலவர்கள் பாடியுள்ளனர். பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்.
கருத்துச்சூழல்
அகத்திணையை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் புறத்தினைப் போன்று பழமையான வரலாற்றுச் செய்திகளை இந்நூலில் காண முடிகிறது. கடையெழு வள்ளல்கள், குறுநில மன்னர்கள் மூவேந்தர்கள் பற்றிய செய்திகள் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தமிழர்களின் திருமண முறை பற்றி அகநானூறு 86, 136 ஆம் பாடல்களும் குடவோலை முறையில் மன்னர்களைத் தேர்வு செய்ததை 77ஆம் பாடல்வழியும் யவனர்கள் நம்முடன் மிளகு வியாபாரம் செய்ததை 148ஆம் பாடல்வழியும் அறிய முடிகிறது.
தாதுஉன் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மான்வினைத் தேரன்”
என்கிறது அகநானூறு நான்காம் பாடல் 10-13ஆம் அடிகள். பூத்துக் குலுங்கும் மலர்ச் சோலையில் பெடையும் வண்டும் தேன் உண்டு தம்மை மறந்து கிடக்கின்றன. தலைவன் வினை முடிந்து அவ்வழியே தேரில் வரும்போது அக்காட்சியைக் காண்கிறான். தேர்மணிகளின் நாவொலி அவ்வண்டுகளின் இன்பத்திற்கு இடையூறு தரும் எனக் கருதி தேர்மணிகளின் நாவை அசையாமல் கட்டித் தேரைச் செலுத்துகிறான். பிற உயிரினங்கள் இன்ப வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாமல் தலைவன் நடந்துள்ள ஒழுக்கத்தை இப்பாடல் வழி அறியமுடிகிறது.
சிறப்புகள்
ஐந்திணைப் பற்றிய நானூறு பாடல்களின் வைப்பு முறையிலும் ஒரு புதுமை கையாளப்பட்டுள்ளது. 1,3,5,7,9 எனும் ஒற்றைப்படை எண்ணாகி வரும் 200 பாடல்கள் பாலை பற்றியனவாகும். 2,8,12,18 எனும் இரண்டு, எட்டு எண்ணாகி வரும் 80 பாடல்கள் குறிஞ்சி பற்றியனவாகும். 4,14,24 எனும் நான்கு என்ற எண்ணுடன் வரும் 40 பாடல்கள் முல்லை பற்றியனவாகும். 6,16,26 எனும் ஆறு எண்ணாக வரும் 40 பாடல்கள் மருதம் பற்றியனவாகும். 10,20,30 எனும் எண்ணாக வரும் 40 பாடல்கள் நெய்தல் பற்றியனவாகும். மாமூலனார், பரணர் போன்றோர்கள் வரலாற்றுச் செய்திகள் பலவற்றைப் பாடல்களில் தருகின்றனர். இதிகாசம், புராணம் பற்றிய செய்திகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் அரசர்கள் நெடுஞ்செழியன், தித்தன், ஆயி, கரிகாலன், எய்னன், அன்னி, ஆதன், எழினி, ஆட்டனத்தி, பாரி, காரி ஆகியோர் பற்றிய குறிப்புகளும் அகநானூறில் காணப்படுகின்றன. இந்நூலைக் கி.பி.1923ஆம் ஆண்டு முதற்பதிப்பு செய்தவர் இராஜ கோபால ஐயங்கார் ஆவார்.
கலித்தொகை - அகநூல்
நூலமைப்பு
கலித்தொகை கலிப்பாவால் ஆனது. தொல்காப்பியம் கலிப்பாவை அகப்பாடலுக்கு ஏற்றதாகவே கூறியுள்ளது. இந்நூலில் பாலைத் திணையில் அமைந்துள்ள 36 பாடல்களைப் பெருங்கடுங்கோவும் குறிஞ்சித் திணையில் உள்ள 29 பாடல்களைக் கபிலரும் மருதத் திணையில் இடம் பெற்றள்ள 35 பாடல்களை மருதன் இளநாகனாரும் முல்லைத் திணையில் காணும் 17 பாடல்களைச் சோழன் நல்லுருத்திரனும் நெய்தல் திணைக்கு அழகு சேர்க்கும் 33 பாடல்களை நல்லந்துவனாரும் ஆக மொத்தம் 150 பாடல்களை ஐந்து புலவர்கள் இயற்றியுள்ளார்கள் என்பதைப்
மருதனிள நாகன் மருதம் - அருஞ்சோழன்
நல்லுருத்திரன் முல்லை, நல்லந்து வன்நெய்தல்
கல்விவலார் கண்ட கலி"
எனும் வெண்பா தெளிவுபடுத்துகிறது. ஆனால் எஸ்.வையாபுரிப் பிள்ளையும் கே.என். சிவராசப் பிள்ளையும் ஐவர் பாடியது என்பதை மறுக்கிறார்கள். நெய்தல் கலியையும் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்தையும் பாடிய நல்லந்துவனாரே கலித்தொகை முழுவதையும் பாடியிருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு. இந்நூல் பதினொரடி சிற்றெல்லையும் எண்பதடி பேரெல்லையும் (11–80) கொண்டது. நூலைத் தொகுத்தவரும் நல்லந்துவனாரே ஆவர். தொகுக்கச் செய்தவர் பெயர் அறியப்படவில்லை.
கருத்துச்சூழல்
பாலை நிலத்தின் கொடுமைகளை விளக்குவதாக பாலைக்கலிப் பாடல்களும் குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளங்களையும் தலைவன் தலைவி திருமணப் போக்கையும் உணர்த்துவதாகக் குறிஞ்சிக்கலிப் பாடல்களும் அமைந்துள்ளன. தலைவனுக்கும் பரத்தையருக்கும் உள்ள உறவைப் பற்றியும் பரத்தையரைப் பற்றியும் தலைவி பழித்துக் கூறுவதாக மருதக்கலிப் பாடல்கள் பேசுகின்றன. ஏறு தழுவுகின்ற செயல்களைப் பெருமைமிக்க வீரமாக போற்றுகின்றன முல்லைக்கலிப் பாடல்கள். தலைவனைப் பிரிந்து வாழும் தலைவி பிரிவினைத் தாங்காது மடலேறும் போக்குக்குத் தள்ளப்படுவதையே நெய்தல் கலிப்பாடல்கள் உணர்த்துகின்றன.
ஆக்கமளி ஊடல் அணிமருதம், நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை இரங்கிய போக்கு ஏற்நெய்தல்
புல்லுங் கலிமுறை கோப்பு”
எனும் பழம்பாடல் கலித்தொகையில் ஒவ்வொரு திணைகளின் அமைப்புப் பற்றியும் அகத்திணைகளுக்குரிய ஒழுக்கம் பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளது. மக்கள் மேற்கொள்ள வேண்டிய ஒன்பது இனிய பண்புகள் எவையெவை என்பதை
போற்றுதல் என்பது புணர்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாமை
அறிவெனப் படுவது பேதையார்சொல் நோன்றல்
செறிவெனப் படுவது கூறியது மாறாமை
நிறைவெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்"
என்கிறது கலித்தொகை 133ஆம் பாடல் 6-14ஆம் அடிகள். உயரிய பண்பாடு சங்ககால மக்களிடம் இருந்தது என்பதையும் வருங்கால மக்கள் இப்பண்புகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் இப்பாடல் அடிகள் வெளிப்படுத்துகின்றன.
சிறப்புகள்
கற்றறிந்தார் ஏத்தும் கலி, கல்விவலார் கண்ட கலி எனும் தொடர்கள் கலித்தொகைக்குச் சிறப்பு சேர்க்கின்றன. மற்ற நான்கு அக இலக்கியங்களும் அகவற்பாவால் அமைந்திருக்க கலித்தொகை மட்டும் தரவு, தாழிசை, சுரிதகம், தனிச்சொல் ஆகிய அமைப்புகளைக் கொண்டு கலிப்பாவால் அமைந்துள்ளது. நூல் முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை செய்துள்ளார். அகத்திணை நூல்கள் ஐந்திணைகளைக் கூறக் கலித்தொகை அவற்றோடு கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் பாடல்களையும் மூவேந்தர்களில் பாண்டியனையும் மதுரையையும் வைகை நதியையும் கூறுகின்றன. மகாபாரதக் கதை நிகழ்வுகள் கலித்தொகையில் இடம் பெற்றிருப்பது சங்க இலக்கியங்களில் காலத்தால் கலித்தொகை பிந்தியது என்பதைக் காட்டுகிறது. இந்நூலைக் கி.பி.1887ஆம் ஆண்டு சி.வை.தாமோதரம் பிள்ளை முதற்பதிப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிற்றுப்பத்து - புறநூல்
நூலமைப்பு
சேரமன்னர்கள் பத்து பேரைப் பற்றிப் பத்து புலவர்கள் ஒர் அரசருக்குப் பத்து பாடல்கள் வீதம் பாடிய 100 பாடல்களே பதிற்றுப்பத்தாகும். இதில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இதுவரைக் கிடைக்கப்பெறவில்லை. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப்பத்தினைக் கூறும் பதிகம் இடம் பெற்றுள்ளது. பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் அறியப்படவில்லை. எட்டடி சிற்றெல்லையும் ஐம்பத்து ஏழடி பேரெல்லையும் (08-57) கொண்ட இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்.
கருத்துச்சூழல்
பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், வெற்றி, கொடை, நீதி, அறம், பண்பாடு, அஞ்சாமை, நாகரிகம் போன்ற செய்திகளைக் கூறுகின்றன. இந்நூல் சேர மன்னர்களின் கால வரிசை கொண்டு தொகுக்கப்பட்டாலும் பாடிய புலவர்கள் மன்னர்களிடம் பரிசு பெற்ற விவரத்தையும் இதில் அறிய முடிகிறது. பதிகம் பாடியவர்களின் பெயர், பத்துப் பாடல்களின் பெயர், ஆண்ட அரசர்களின் காலவரையறை போன்றவற்றைப் பாடல்கள் நன்கு புலப்படுத்துகின்றன. ஒருவரை வாழ்த்தும் போது மனநிறைவுடன் வாழ்த்த வேண்டும் என்பதை
யாண்டோர் அனைய ஆக யாண்டே
ஊழி அனைய ஆக, ஊழி
வெள்ள வரம்பின் ஆக"
என்கிறது பதிற்றுப்பத்து 90 ஆம் பாடல் 51-54ஆம்அடிகள். இதன்மூலம் பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இருபொறையை வாழ்த்துவதை அறிய முடிகிறது.
இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது. பாடியதற்காக உம்பர் காட்டு ஐந்நூறுஊர்களையும் முப்பத்தெட்டு ஆண்டுகள் தென்னாட்டு வருவாயில் ஒரு பகுதியையும் பரிசாகப் பெற்றுள்ளார்கள். மூன்றாம் பத்து பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடியதற்கு அவர் வானுலகம் செல்ல வழிசெய்தார். நான்காம் பத்து களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரனைப் பாடிய காப்பியற்று காப்பியனார், நாற்பது நூறாயிரம் பொன்னும் ஆட்சியில் ஒரு பாகத்தையும் பரிசாகப் பெற்றுள்ளார். ஐந்தாம் பத்து கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடிய பரணர் உம்பர் காட்டு வருவாயினைப் பரிசாகப் பெற்றுள்ளார்.
ஆறாம் பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் பாடியதற்கு ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசு பரிசாகப் பெற்றுள்ளார். ஏழாம் பத்து செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியதற்கு நூறாயிரம் காணமும் மலைமீது ஏறிநின்று தன் கண்ணுக்கு எட்டிய நாடுகளையும் பரிசாகப் பெற்றுள்ளார். எட்டாம் பத்து பெருஞ்சேரலிரும் பொறையைப் பாடிய அரிசில்கிழார் ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் அரசுரிமையையும் பரிசாகப் பெற்றுள்ளார். ஆனால் அரசு உரிமைகளை மன்னருக்கு மீண்டும் அளித்துள்ளார். ஒன்பதாம் பத்து குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய பெருங்குன்றூர் கிழார் முப்பத்து இரண்டாயிரம் பொற்காசுகளையும் வேறுசில பரிசுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்புகள்
இதில் பாடாண் திணையில் மட்டுமே பாடல்கள் அமைந்துள்ளன. திருமணத்தின் போது அருந்ததி எனும் விண்மீனைப் பார்ப்பதும் வணங்குவதும் சேரநாட்டில் வழக்கமாக உள்ளது. சேர மரபைச் சேர்ந்த இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திலும் இச்செய்தியைச் சுட்டுகிறார். பதிற்றுப்பத்தில் இன்று வழக்கில் இல்லாத தமிழ்ச் சொற்கள் இருப்பதைக் காணமுடிகிறது. இரவலர் வராதபோது அவர்களைத் தேரில் அழைத்து வந்து வரிசை செய்யும் வள்ளல் என ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் கொடைத் தன்மையை நச்செள்ளையார் பாராட்டுகிறார்.
பாணர், கூத்தர், விறலியர், ஆகிய மலைவாழ் மக்கள் வறுமையில் வாடியதைக் கண்ட சேர மன்னன் அவர்களின் வறுமையைப் போக்கியுள்ளான். கடலில் செல்லும் கலங்களைக் கடம்பர் என்ற இனத்தவர் கொள்ளையடித்ததைச் சேரமன்னன் தடுத்து கடலில் கலம் செல்ல பாதுகாப்பு அளித்துள்ளான். சேர மன்னன் மேற்கு மலைத் தொடரில் உள்ள கொற்றவையும் திருமாலையும் வழிபட்டுள்ளது தக்க சான்றுகளுடன் தெளிவாகிறது. அந்தாதித் தொடையால் அமைந்த நான்காம் பத்து பிற்கால அந்தாதி இலக்கியத்திற்கு வித்திட்டது என்கிறார்கள். இந்நூலைக் கி.பி.1904ஆம் ஆண்டு முதற்பதிப்பு செய்தவர் உ.வே.சாமிநாத ஐயர் ஆவார்.
புறநானூறு - புறநூல்
நூலமைப்பு
அறம், பொருள், வீடு எனும் புறம் பற்றி 160 புலவர்கள் பாடிய 400 பாடல்களின் தொகுப்பே புறநானூறு. நான்கடி சிற்றெல்லையும் நாற்பதடிப் பேரெல்லையும் (04-40) கொண்ட இந்நூலைத் தொகுத்தவர் தொகுப்பித்தவர் இன்னாரென்று தெரியவில்லை. இந்நூலுக்குப் புறம், புறம்பு, புறப்பாட்டு என்ற பெயர்களும் உண்டு. பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவனைப் பற்றி இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து இயற்றியுள்ளார். புறநானூற்று பாடல்களில் 267, 268 ஆம் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. 16 பாடல்களைப் பாடியப் புலவர்களின் பெயர்கள் இதுவரை அறியப்படவில்லை.
கருத்துச்சூழல்
பழங்காலத் தமிழர்களின் சமுதாய வாழ்வு, அரசியல் எழுச்சி, உயர்ந்த ஒழுக்கம், உறுதியான கொள்கை, தன்னலமற்ற அறம், தலைநிமிர்ந்த வீரம், பகுத்துண்ணும் பண்பு, பரிசில் வாழ்க்கை போன்ற தகவல்களைப் புறநானூறு எடுத்தியம்புகிறது. இந்நூல் 12 பாண்டிய மன்னர்கள் பற்றியும் 18 சேர அரசர்கள் பற்றியும் 13 சோழ வேந்தர்கள் பற்றியும் 18 வேளியர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. நாட்டு மக்களிடம் வீரர்கள் காட்டிய அன்பும் அவர்களுக்காக அஞ்சாமல் உயிர் துறந்த வீரவரலாறும் சிறப்பாகப் பேசப்படுகிறது.
போரில் கொலையும் கொள்ளையும் மிகுதியாகச் செய்பவனே வீரன் என்று போற்றப்பட்டு அவனுக்கு நடுகல் நட்டு வணங்கியுள்ளார்கள். போரில் ஈடுபடாத அந்தணர், கருவுற்ற பெண்கள், பேடிகள், ஆசான்கள் போன்றோர்கள். தம்மைச் சார்ந்தோர்களின் இறப்புக்காக வருந்தியதாகத் தெரிகிறது. மங்கையர்கள் மங்கல அணி அணிதல், நடுகல் அமைத்தல், நட்டக் கல்லைச் சுற்றி மயிர்ப்பீலி சூட்டுதல், கைம்மை நோன்பு நோற்றல், உண்டி சுருங்குதல், இறந்தாரைத் தாழியில் வைத்து புதைத்தல், உடன் கட்டை ஏறுதல் போன்ற நிகழ்வுகளைப் புறநானூற்றுப் பாடல்களில் காணமுடிகிறது.
இகழ்தல் அதனினும் இலமே”
அல்லது செய்தல் ஓம்புமின்”
முதலான சிறப்புமிக்க புறநானூற்று அடிகள் உலகில் எம்மொழியிலும் இல்லை. இது போன்ற எண்ணற்ற அடிகள் பண்டைத் தமிழர்களின் உயர்ந்த எண்ணத்தையும் சிறந்த நெறிகளையும் விளக்குகின்றன. இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உள்ளன்போடு ஒருவர் கொடுப்பதையும் உயர்ந்தப் பண்போடு அதை மறுப்பதையும் புறநானூற்று பாடல் கூறுகிறது.
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"
எனும் புறநானூற்று 204ஆம் பாடல் உலக அரங்கில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். கேட்பவரையும் கொடுப்பவரையும் உயர்த்தியும் தாழ்த்தியும் நாகரிகமாக அறிவுரை வழங்குவதாகவே பாடல் வரிகள் அமைந்துள்ளன.
சிறப்புகள்
சமயம் சாராத புறநானூற்றுக்கு முதல் 266 பாடல்களுக்குப் பழைய உரை கிடைத்துள்ளது. புறநானூறு திருக்குறளுக்கு முன்னது என்பார்கள். 10 வகை ஆடைகளையும் 28 அணி வகைகளையும் 30 படைக்கள வகைகளையும் 67 உணவு வகைகளையும் புறநானூற்றில் காண முடிகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் (192) செல்வத்துப் பயனே ஈதல் (189) மறச்செயலையும் அறச் செயலையும் செய்க (9) மன்னனை விட புலவனே உயர்ந்தவன், பால்குடிக்கும் பாலகனும் வேல் எடுத்து களம் கண்ட வீரம் போன்ற செயல்கள் உலகில் எந்நாட்டிலும் எம்மொழியிலும் இல்லாதவை. சங்ககால வீரயுகத்தைக் கண்முன் நிறுத்தும் காலக்கண்ணாடியாக உள்ளது புறநானூறு. இந்நூலைக் கி.பி.1894ஆம் ஆண்டு உ.வே.சாமிநாத ஐயர் முதற்பதிப்பு செய்துள்ளார்.
பரிபாடல் - அகப் புற நூல்
நூலமைப்பு
''ஓங்கு பரிபாடல்" எனும் சிறப்புப் பெற்ற இந்நூல் பரந்து செல்லும் ஓசையுடைய ஒருவகை இசைப்பாவால் ஆனது. அகமும் புறமும் பற்றி 70 பாடல்கள் என்றாலும் இன்று நமக்குக் கிடைத்துள்ளது 22 பாடல்களே ஆகும். இருபத்து ஐந்தடி சிற்றெல்லையும் நானூறடி பேரேல்லையும் (25-400) கொண்ட பரிபாடலை 13 புலவர்கள் பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இசை வகுத்தவர் இன்னாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிபாடலின் முதல் பாடலையும் இறுதிப் பாடலையும் இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் அறியப்படவில்லை. கடவுள் வாழ்த்தும் இந்நூலுக்கு இல்லை. இந்நூல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது என மா.இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.
கருத்துச்சூழல்
பரிபாட்டுக்களின் தொகுப்பு பரிபாடலாயிற்று. காமம் கருத்தாக அமைய சிற்றெல்லை 25 அடியும் பேரெல்லை 400 அடியும் வரும் என்கிறார் தொல்காப்பியர். எனவே இலக்கணப்படி பரிபாடல் அகப்பாடல் ஆகும். இதிலுள்ள பாடல்களின் எண்ணிக்கையைத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று - மருவினிய
வையைறிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்"
என்று பழங்கால வெண்பா கூறியுள்ளது. ஆனால் திருமாலைப் பற்றி ஆறு பாடல்களும் முருகனைப் பற்றி எட்டு பாடல்களும் வையைப் பற்றி (அகப்பொருள்) எட்டு பாடல்களும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. செவ்வேள் இடத்தில் வேண்டும் கடுவன் இளவெயினனார்.
பொருளும் பொன்னும் போகமும் அல்ல - நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளினர்க் கடம்பின் ஒலி தாராயோ”
எனும் பரிபாடல் ஐந்தாம் பாடல் 78-81ஆம் அடிகள் மூலம் வேண்டுகிறார். திருமாலின் தோற்றப் பொலிவும் அவர் அவதாரத்தின் செயல்களும் பலவாறு போற்றப்டுகிறது.
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ"
எனும் பரிபாடல் மூன்றாம் பாடல் 63-65ஆம் அடிகள் இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற பிரகலாதனின் வாக்கை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.
பூவொடு புரையும் சீர்ஊர் - பூவின்
இதழகத்து அனைய தெருவம் இதழகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தன்தமிழ்க் குடிகள்”
எனும் பரிபாடல் எட்டாம் பாடல் 1-5ஆம் அடிகள் மதுரை மாநகரின் அமைப்பை ஒரு தாமரை மலருக்கு ஒப்பிட்டுக் கூறுகிறது. பரிபாடல் அகம்புறம் கலந்த இலக்கியமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்புகள்
பரிபாடல் இசை பொருந்திய நான்கு வகை பாக்களால் பாமர மக்களின் சமயம் சார்ந்த வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுகிறது. பாடல்களில் புறக்கருத்துகள் மிகுதியாக உள்ளமையால் பரிபாடலை அகப்புற நூல் என்கிறார்கள். வைகை நதி இருகரை தொட்டு ஓடுகின்ற வெள்ளப்பெருக்கையும் பாடல்கள் விவரிக்கின்றன. தெய்வ வணக்கத்திற்கு ஏற்ற வகையில் பரிபாடலின் பாடல்கள் அமைந்துள்ளன. அகலிகை, மன்மதன் போன்றோரின் ஓவியங்கள் திருப்பரங்குன்றத்தில் தீட்டப்பட்டிருந்தமையைப் பரிபாடல் மூலம் அறிய முடிகிறது. நெய்தல், ஆம்பல், குவளை, சங்கம், வெள்ளம், கமலம் ஆகிய சொற்கள் நூறு, ஆயிரம், பதினாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி போன்ற எண்களுக்குக் குறியீடாகப் பயன்படுத்தப் பட்டமையைப் பரிபாடலில் காணமுடிகிறது. எட்டுத்தொகை நூல்களில் அகம் புறம் கலந்த ஒரே நூல் பரிபாடல். இந்நூலுக்குப் பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். இந்நூலைக் கி.பி.1918ஆம் ஆண்டு உ.வே.சாமிநாத ஐயர் முதற்பதிப்பு செய்துள்ளார்.
தொகுப்புரை
சங்க இலக்கியப் பாடல்களில் மன்னர்களின் ஆட்சி நிருவாகம், போர்தந்திரம், கொடைத்தன்மை, களவு, கற்பு வாழ்க்கையில் மக்களின் ஒழுங்குநிலை, செவிலித்தாய், தோழி செயல்கள் ஆகியவற்றைக் காண முடிகிறது. ஆன்மீகத்துடன் வாய்மைநிலை, விருந்தோம்பல், புலவர்களின் புலமைத்திறம் போன்றவற்றைச் சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தியுள்ளன. உயிரினங்களைப் போற்றி அன்புகாட்டல், அறம் செய்தல், இயற்கையைப் பேணுதல், நீர் நிருவாகம், வேளாண்மை, கைத்தொழில், மொழியுணர்வு, நாட்டுப்பற்று ஆகியவற்றைப் பாடல்கள் வழி உணரமுடிகிறது. பரத்தையர் தொடர்பு, புலால் உண்ணல், மது அருந்துதல், வழிப்பறிக் கொள்ளை ஆகிய செயல்கள் சங்க காலத்தில் இருந்துள்ளதை அறியமுடிகிறது.





கருத்துகள்
கருத்துரையிடுக