ஜப்பான் நாட்டில் கி.பி.18ஆம் நூற்றாண்டில் ஐக்கூக் கவிதையில் இருந்து காரை சென்ரியு என்பவர் முதன் முதலில் சென்ரியு கவிதையை இயற்றினார். ஜப்பான் நாட்டின் மரக்கடைகளிலும் தேநீர் கடைகளிலும் பொதுமக்கள் மானுடம் பற்றி பேசிய நகைச்சுவை செய்திகளே சென்ரியு கவிதை உருவாக அடிப்படைக் காரணமாகக் கூறப்படுகிறது. சென்ரியு கவிதை சுருக்கமாகச் சொன்னால் கவிதைகளில் தத்துவம் அதிகம் இருந்தால் அது ஐக்கூக் கவிதை, தத்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது சென்ரியு கவிதை என்கிறார்கள். ஜப்பானில் முதல் உலகப்போர் முடிவுறும் நேரத்தில் இக்கவிதை தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்ரியு கவிதை - விளக்கம்
ஜப்பான் நாட்டின் எடோ நகரத்தில் கி.பி.1718 ஆம் ஆண்டு காரை ஹச்சிமேன் எனும் இயற்பெயர் கொண்ட சென்ரியு பிறந்தார். இவர் ஜப்பான் நாட்டில் இயற்றப்பட்ட ஐக்கூக் கவிதைகளில் உள்ள மானுடம் பற்றிய நகைச்சுவை தத்துவக் கருத்துகளைத் தொகுத்து சென்ரியு கவிதை எனும் தொகுப்பைக் கி.பி. 1757 ஆம் ஆண்டு வெளியிட்டார். இவர் தொகுத்து வெளியிட்ட நூலுக்கு இவர் பெயரே அமைந்ததால் இவ்வாறான கவிதைகளைச் சென்ரியு கவிதை என அழைக்கப்பட்டு வருகிறது.
சென்ரியு கவிதை - இலக்கணம்
ஐக்கூக் கவிதைக்குரிய அதே இலக்கணம்தான் சென்ரியு கவிதைக்கும். மூன்று வரிகளில் அமைய வேண்டும். ஐந்து ஏழு ஐந்து எனும் அளவில் அசைகள் இருக்க வேண்டும். சென்ரியு கவிதை என்பது ஆழமற்றது, வேடிக்கையானது, விடுகதை போன்றது, நகைச்சுவையானது, பொன்மொழிகள் போன்ற கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்றது. மேலும் சமூகம், அரசியல், பொருளாதாரம், மெய்யியல் போன்றவற்றில் அக்கறை காட்ட வேண்டும் எனக் கூறப்படுகிறது.
தமிழில் சென்ரியு கவிதை
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடராஜன் வள்ளியம்மை தம்பதிக்கு மகனாக 28.09.1940 இல் ஜெகதீசன் எனும் இயற்பெயர் - கொண்ட ஈரோடு தமிழன்பன் பிறந்தார். ஜப்பானில் கி.பி.1757 ஆம் ஆண்டு ஐக்கூக் கவிதையில் இருந்து தோன்றிய சென்ரியு கவிதையை இவர் கி.பி.2001 ஆம் ஆண்டில் ஒரு வண்டி சென்ரியு எனும் சென்ரியு கவிதைத் தொகுப்பைத் தமிழ் நாட்டில் முதன் முதலாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவாகவில்லை
தோல்வி முடிவாகிவிட்டது"
"சட்ட ஒழுங்கை
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்"
இவை போன்ற எண்ணற்ற சென்ரியு கவிதைகளை ஈரோடு தமிழன்பன் இயற்றியுள்ளார். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஐக்கூக்கவிதை, சென்ரியு கவிதை,விமரைக் கவிதை, விமர்புன்கவிதை, ஐக்கூப் புன் கவிதை, விமர்சென்ரியு கவிதை ஆகிய அனைத்து வகை கவிதைகளையும் தமிழ்நாட்டில் இயற்றிய போற்றுதலுக்குரிய ஒரே கவிஞர் ஈரோடு தமிழன்பண் மட்டுமே ஆவார்.
இவரைத் தொடர்ந்து பாரதி வசந்தனின் யாதெனில், புதுவை யுகபாரதியின் அரசமரம், வே.மணிகண்டனின் மாமதயானை, பிரியாபுளோரியின் குறுமணல், கவிஞர் இரமேஷின் ஓராயிரம் சென்ரியு போன்ற கவிதை நூல்கள் வெளியாகி சென்ரியு கவிதைக்கு வலு சேர்த்து வருகின்றன. ஜப்பானில் ஐக்கூக் கவிதைக்கும் சென்ரியு கவிதைக்கும் உள்ள வேறுபாடு குறித்து மேரிகேசல் என்பவர் கி.பி.1980 ஆம் ஆண்டு நூல் இயற்றியுள்ளார். இதனால் தற்போது பலரும் வேறுபாடுகளை உணர்ந்து அங்குக் கவிதை இயற்றுவதாகக் கூறுகிறார்கள்.
தொகுப்புரை
ஜப்பான் நாட்டில் இருந்து வந்த ஐக்கூ, சென்ரியு கவிதைகள் அதற்குரிய இலக்கணத்துடன் அமையும் போது கவிதைக்குரிய தகுதியைப் பெறுகிறது. வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் உலகளாவிய கருத்துகளை எடுத்தாளும் ஆற்றல் பெற்றவை. புதுக்கவிதைக்கும் ஐக்கூ, சென்ரியு கவிதைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து கவிதை எழுத வேண்டும். புதுக்கவிதை எழுதுவதை விட ஐக்கூ, சென்ரியு கவிதைகள் எழுதுவது கடினம், மரபுக் கவிதையைப் புரிந்து கொள்வதைவிட ஐக்கூ, சென்ரியு கவிதைகளைப் புரிந்து கொள்வது கடினம். எனவே ஐக்கூ, சென்ரியு கவிதைகளை அதற்குரிய இலக்கணத்துடன் இயற்றப்பட்டால் தமிழ் இலக்கிய உலகில் அவை நிலைப்பதற்கு வாய்ப்புண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக